வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (28/11/2018)

கடைசி தொடர்பு:16:00 (28/11/2018)

நிர்மலா தேவி வழக்கில் சி.பி.சி.ஐ.டி அறிக்கையைக் கேட்கும் நீதிபதிகள்!

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் பேராசிரியர் நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான வழக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஏற்கெனவே ஜாமீன் கேட்டு இவர்கள் தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

நிர்மலாதேவி

அரசு தரப்பில் எங்கள் மீது கூறப்படும் அனைத்து குற்றச்சாட்டுக்கும் எந்தவித அடிப்படை முகாந்திரமும் இல்லை’ எனக் கூறி தங்களை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று முருகன், கருப்பசாமியைத் தொடர்ந்து நிர்மலாதேவியும் மனு செய்திருந்தார். இந்த நிலையில், அவர்கள் தாக்கல் செய்த மனுவை எதிர்த்து சி.பி.சி.ஐ.டி-யினர்  மனுத்தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இந்த நிலையில், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலர் சுகந்தி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ``நிர்மலாதேவி தொடர்பான வழக்கில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பலருக்குத் தொடர்புள்ளது. ஆனால், அவர்களின் பெயர்கள் வழக்கில் சேர்க்கப்படவில்லை. சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் நியாயமாக விசாரிக்காமல் ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். எனவே, நிர்மலாதேவி வழக்கை சி.பி.சி.ஐ.டி வசமிருந்து சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும். அதுவரை ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிர்மலாதேவி வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்" என கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அரசுத்தரப்பில், நிர்மலாதேவி தொடர்பான வழக்கில் முறையாக விசாரணை நடைபெற்று, இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து நீதிபதிகள், ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இறுதி அறிக்கையை சீலிட்ட கவரில் டிசம்பர் 3-ம் தேதிக்குள்ளாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மகிளா நீதிமன்ற நீதிபதிக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை டிசம்பர் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.