`15 நாள்களில் வெடிகுண்டு வெடிக்கும்!’ - தேனி ஆசிரமத்துக்கு வந்த மர்மக் கடிதம் | Theni ashram gets hoax bomb threat

வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (28/11/2018)

கடைசி தொடர்பு:17:10 (28/11/2018)

`15 நாள்களில் வெடிகுண்டு வெடிக்கும்!’ - தேனி ஆசிரமத்துக்கு வந்த மர்மக் கடிதம்

தேனி அருகே உள்ள வேதபுரீஆசிரமத்துக்குக் கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட ஆசிரமம்

தேனி அரண்மனைப்புதூர் அருகே உள்ள வேதபுரீ ஸ்ரீசுவாமி சித்பவாதந்த ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆசிரமத்தின் அருகே ஸ்ரீதட்சிணாமூர்த்தி கோயில் ஒன்றும் உள்ளது. இங்கே 30 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வேதம் படித்துவருகிறார்கள். பா.ஜ.க தலைவர்கள் யார் தேனி மாவட்டத்துக்கு வந்தாலும், இந்த ஆசிரமத்துக்குச் செல்வது வழக்கம். இந்நிலையில், ஆசிரமத்துக்குக் கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்கடிதத்தில் இன்னும் 15 நாள்களில் ஆசிரமம் மற்றும் கோயில் ஆகியவை வெடிகுண்டு  வைத்துத் தகர்க்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து ஆசிரமம் சார்பில் தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் நேரடியாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆசிரம வளாகத்தில் தீவிர சோதனை நடைபெற்றது. இதில் வெடிகுண்டு ஏதும் கண்டறியப்படவில்லை. ஆசிரமத்துக்கு விடுக்கப்பட்டுள்ள வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து கோயில் மற்றும் ஆசிரமத்துக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மிரட்டல் கடிதம் தர்மபுரி மாவட்டத்திலிருந்து வந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். மேலும், யார் அந்தக் கடிதத்தை எழுதியது என்றும் விசாரித்து வருவதாகவும் அவர்கள் கூறினர்.