வெளியிடப்பட்ட நேரம்: 17:25 (28/11/2018)

கடைசி தொடர்பு:19:12 (28/11/2018)

`நீலகிரி கலெக்டரை மாத்தப்போறாங்களாம்!'- முறையிட்ட மனுதாரர்; அதிரடி காட்டிய உச்சநீதிமன்றம்

யானைகள் வழித்தடம் தொடர்பான வழக்கில் நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவைப் பணியிட மாற்றம் செய்ய சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றும் பணியில் கலெக்டர் ஈடுபட்டுள்ளதால் மறுஉத்தரவு வரும் வரை தமிழக அரசு இன்னசென்ட் திவ்யாவை இடமாற்றம் செய்யக் கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இன்னசென்ட் திவ்யா

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் அருகே உள்ள மசினகுடி, பாெக்காபுரம், வாழைத்தாேட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யானைகள் வழித்தடத்தில், முறையான அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்த ரிசார்ட்டுகளுக்கு சீல் வைக்க வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2009-ம் ஆண்டு யானை ராஜேந்திரன்  வழக்கு தாெடர்ந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு 2011-ம் ஆண்டு வெளியான நிலையில், ரிசார்ட்டு உரிமையாளர்கள் ஒன்றிணைந்து சீல் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றனர். தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருந்தது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம், யானைகள் வழித்தடத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வரும் ரிசார்ட்டுகளுக்கு 24 மணி நேரத்தில் நோட்டீஸ் விநியோகித்து, 48 மணி நேரத்துக்குள் சீல் வைக்க வேண்டும் என நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டார். இதனால் ஆகஸ்ட் மாதம் 39 ரிசார்ட்டுகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவைப் பணியிட மாற்றம் செய்ய முயற்சி நடப்பதாக முறையிட்டபோது, கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவைப் பணியிட மாற்றம் செய்ய சுப்ரீம் கோர்ட் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

இது குறித்து யானை ராஜேந்திரன் கூறுகையில், ``நேற்று பணி நிமித்தமாக விமான நிலையம் செல்ல வேண்டியிருந்தது. அங்கு ஒரு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியைச் சந்திக்க நேர்ந்தது. அப்பாேது அவர், ``என்ன சார் நீங்க எல்லாம் இவ்வளவு சிரமப்பட்டு என்ன பண்ணப் பாேறீங்க, நீலகிரி மாவட்ட கலெக்டர டிரான்ஸ்ஃபர் பண்ற ஐடியால இருக்காங்கன்னு சாென்னாரு. சில உயர் பதவியில் உள்ள அரசியல் தலைவர்கள், நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தைச் சுற்றியுள்ள பாெக்காபுரம், மாவனல்லா, மசினகுடி உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் வழித்தடத்தில் ஹாேட்டல்கள், ரிசார்ட்டுகள், சாெகுசு வீடுகள் பாேன்றவற்றைக் கட்டியுள்ளனர். தற்பாேது நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவின் நடவடிக்கையால் அவர்களும் பாதிக்கப்படலாம் என்று எண்ணி, அரசியல் அதிகாரம் காெண்டு கலெக்டரை பணியிடம் மாற்ற முயல்கின்றனர்.

எனவே, இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகளிடம் யானைகள் வழித்தடத்தில் செயல்படும் ரிசார்ட்டுகளுக்கு சீல் வைக்கும் பணியில் துணிந்து ஈடுபட்டு வரும் நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவைப் பணியிட மாற்றம் செய்ய, அரசியல் பிரமுகர்கள் சிலர் மறைமுகமாக முயற்சி செய்வதாக முறையிட்டேன். அதை ஏற்ற நீதிபதிகள், ``நீலகிரி கலெக்டராக இன்னசென்ட் திவ்யா தொடர்வார். கோர்ட் உத்தரவு பிறப்பிக்கும் வரை திவ்யாவை அரசு இடமாற்றம் செய்யக் கூடாது'' எனக் கூறி வழக்கை ஜனவரி மாதத்துக்குத் தள்ளி வைத்தனர். மேலும் ``திவ்யாவுக்கு வேற ஏதாவது பணியோ தரக்கூடாது. உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் உத்தரவிடும் வரை அவரே கலெக்டராக தொடர் வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது'' என்று கூறினார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க