வெளியிடப்பட்ட நேரம்: 18:15 (28/11/2018)

கடைசி தொடர்பு:18:15 (28/11/2018)

`கட்டாயம் பதிவு செய்யணும்!’ - மசாஜ் மையங்களுக்குத் தேனி கலெக்டர் உத்தரவு

தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் (முறைப்படுத்துதல்) விதிகள் 2018-ன்படி ஆயுஷ் மருத்துவமனைகள் உட்பட அனைத்து மருத்துவ நிறுவனங்களைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் எனத் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு  மருத்துவ நிறுவனங்கள் (முறைப்படுத்துதல்) விதிகள் 2018-ன்படி மருத்துவ நிறுவனங்களைக் கட்டாயம் பதிவு செய்திட வழிமுறை வழங்கப்பட்டுள்ளது. அரசாணை எண்: 206, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, நாள்: 01.06.2018-ன் படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆயுஷ் மருத்துவமனைகள், ஆலோசனை மையங்கள், பஞ்சகர்மா, மூலிகை மசாஜ் மையங்கள் ஆகியவை தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் (முறைப்படுத்துதல்) சட்டம், 1997-ன் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும். எனவே, தேனி மாவட்டத்தில் மருத்துவ சேவை அளித்து வரும் அனைத்து ஆயுஷ் மருத்துவமனைகள், ஆலோசனை மையங்கள் பஞ்சகர்மா, மூலிகை மசாஜ் மையங்களின் உரிமையாளர்கள் தங்களது மருத்துவ நிறுவனங்களைப் பதிவு செய்யும் பொருட்டு பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள மாவட்ட சித்த மருத்துவ அலுவலரை உடனடியாகத் தொடர்புகொண்டு விவரங்களைப் பெற்று பதிவு செய்திட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் போலி மருத்துவர்களும் போலி மருத்துவமனைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழலில், படித்த மருத்துவர்களைக் கொண்டு மருத்துவமனைகள் இயங்குகிறதா என இந்தக் கட்டாயப் பதிவின் மூலம் எளிமையாக அறிந்துகொள்ள முடியும் எனக் கருத்து தெரிவிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.