வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (28/11/2018)

கடைசி தொடர்பு:17:40 (28/11/2018)

`சுத்தமெல்லாம் நான் பார்க்கிறதில்லை!’ - மகனை பராமரிப்பது குறித்து விஜயலட்சுமி

`பிக் பாஸ்’ விஜயலட்சுமியை, அவர் பெயர் சொல்லி அழைப்பதற்குப் பதில் 'நிலன் அம்மா' என்றால் சந்தோஷத்தில் முகம் தாமரைப் பூ போல மலர்ந்துவிடுகிறது. பிள்ளையைப் பற்றிய பேச்சை எடுத்தாலே, தன் பிள்ளை சிரிப்பது, நடப்பது, பேச முயல்வது என்று அவனைப் பற்றிய நான்கு தகவல்களையாவது வாய் நிறைய சிரிப்புடன் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்துவிடுகிறார். தாய்மை உணர்வில் பூரித்துப்போய் கிடக்கும் விஜயலட்சுமியின் குழந்தை வளர்ப்பு பாரம்பர்யத்துடன் காலத்துக்கு ஏற்றபடியும் இருக்கிறது. 

``நிலனுக்கு ஒன்றரை வயசுதான் ஆகுது. இந்தக் கால அம்மாக்கள் மாதிரி நான் நிலனை பொத்திப் பொத்தி எல்லாம் வளர்க்கிறதில்லை.  வீடு, வாசல்னு அவனைச் சுதந்திரமா விளையாட விடுவேன். அதே மாதிரி என் பிள்ளை விஷயத்தில்  'அச்சச்சோ இதை தொட்டா தூசு; அதைத் தொட்டா அழுக்கு' என்கிற மாதிரியெல்லாம் அளவுக்கு அதிகமான சுத்தமெல்லாம் நான் பார்க்கிறதில்லை. தேவையான அளவுக்குக்  கவனமா இருந்துப்பேன், அவ்வளவுதான். இன்ஃபேக்ட் நாம சுத்தம் சுத்தம்னு பார்த்துப் பார்த்து வளர்க்கிறதால்தான், இப்ப இருக்கிற குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்காமல்போய், கிளைமேட் கொஞ்சம் மாறினால்கூட சளி, காய்ச்சல்னு ரொம்ப கஷ்டப்பட்டுறாங்க. 

கணவர் மற்றும் மகன் நிலனுடன் விஜயலட்சுமி

நிலனுக்கு மணலில் விளையாட ரொம்பப் பிடிக்கும். மணலில் விளையாடினால், குழந்தைகளுக்கு ஐந்து விரல்களையும் சேர்த்து வேலை செய்கிற ஃபிங்கர் கோ - ஆர்டினேஷன் நல்லா வரும். அதனால், வீட்டுத் தோட்டத்தில் நிலன் விளையாடுவதற்கென்றே தனியாக மணல் கொட்டி வைச்சிருக்கேன். நிலனை, இதுவரை போனில் கேம் விளையாட நான் அனுமதித்ததே இல்லை'' என்கிற விஜயலட்சுமியின் குரலில், குழந்தை வளர்ப்பில் தான் நல்ல அம்மா என்கிற பெருமிதம் ஒலிக்கிறது!