வெளியிடப்பட்ட நேரம்: 18:35 (28/11/2018)

கடைசி தொடர்பு:18:35 (28/11/2018)

ஆணவக் கொலையில் மாணவர்கள் கைது எதிரொலி - பள்ளிகளில் மனநல ஆலோசனைக்கு ஏற்பாடு!

நெல்லை மாவட்டத்தில் சாதிய வன்மத்துடன் ஆணவக் கொலையில் ஈடுபட்டதற்காகப் பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது.

மாணவர்கள் பேரணி

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக பாளையங்கோட்டையில் பிளாஸ்டிக் ஒழிப்புப் பேரணி நடைபெற்றது. வ.உ.சி மைதானத்தில் தொடங்கிய பிளாஸ்டிக் ஒழிப்புக்கான விழிப்புஉணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். அதில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புஉணர்வு வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி முக்கிய வீதிவழியாகச் சென்றார்கள். 

பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பேரணியில் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், ``நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள வெள்ளாங்குழியில் பள்ளி மாணவர்கள் சிலர் சேர்ந்து கூட்டுறவு வங்கி ஊழியரைக் கொலை செய்துள்ளனர். இது போன்ற குற்றச் செயல்களில் மாணவர்கள் ஈடுபடுவது வருத்தமளிக்கிறது. 

மாணவர்களின் மனநிலையில் இது போன்ற உணர்வு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், நெல்லை மாவட்டத்தில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் முதல் அனைத்து மாணவர்களுக்கும் அந்தந்தப் பள்ளிகளிலேயே மனநல ஆலோசனைகள் வழங்க உள்ளோம். தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலமாக இத்தகைய ஆலோசனைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ஐந்து பள்ளிகளில் கவுன்சலிங் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் குழுக்கள் அமைத்து அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கும் மனநல ஆலோசனை வழங்கப்படும்’’ என்று தெரிவித்தார்.