வெளியிடப்பட்ட நேரம்: 16:57 (28/11/2018)

கடைசி தொடர்பு:16:57 (28/11/2018)

`தூத்துக்குடியைக் காப்பாற்ற இதுதான் வழி’ - தமிழக அரசை எச்சரிக்கும் ஜவாஹிருல்லா!

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு கொள்கை முடிவாக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

ஜவாஹிருல்லா

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது ஆலைத் தரப்பு. ஆலைத் தரப்பின் மனுவை ஏற்ற பசுமைத் தீர்ப்பாயம் இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்ய மேகாலயா மாநில ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான இருவர் கொண்ட குழுவை நியமித்தது தீர்ப்பாயம். இக்குழு கடந்த 22-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கழிவுகள் கொட்டிவைக்கப்பட்ட இடம், ஆலையினுள் உள்ள யூனிட்டுகள், குடோன்கள் ஆகியவற்றில் ஆய்வை மேற்கொண்டதுடன் மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டமும் நடத்தியது. தொடர்ந்து ஆய்வறிக்கையை நீதிபதி குழு தாக்கல் செய்தது. இந்த அறிக்கையின் மீது இன்று நடந்த விசாரணையின்போது `ஸ்டெர்லைட் ஆலை மூடியது தவறான முடிவு. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்குத் தமிழக அரசு கூறிய காரணங்கள் ஏற்கும்படியாக இல்லை. ஆலை மூடப்படுவதற்கு முன்பு ஆலைத்தரப்பிடம் விளக்கம் கேட்கப்படவில்லை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தமிழக அரசின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது சர்ச்சையான நிலையில் நீதிபதி குழுவின் இந்த ஆய்வறிக்கை தூத்துக்குடி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசின் மெத்தனப்போக்கைக் கண்டித்துள்ளார் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா. இது தொடர்பாக அவர் பேசும்போது, ``நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவைத் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்தது. அக்குழு இன்று தாக்கல் செய்த அறிக்கையில் முன்னறிவிப்பின்றி ஆலையை மூடியது நியாயமில்லை எனத் தெரிவித்து, அந்த ஆலையைத் திறக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளது. இந்த ஆய்வுக்குக் குழுவின் பரிந்துரையால் இந்த நாசகரமான ஆலை மீண்டும் திறக்கப்படும் என்ற அச்சம் தூத்துக்குடி மக்களிடையே அதிகரித்துள்ளது. 

ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் இந்த அரசாணைக்கு எதிராக ஸ்டெர்லைட் நிர்வாகம் நீதிமன்றங்களை நாடினால் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றித் தருவோம் என வாக்குறுதி அளித்து மீண்டும் நாசகர ஆலையைத் திறக்க வாய்ப்புள்ளது எனவும் ஸ்டெர்லைட் ஆலை மூடல் என்ற அரசின் இந்த அரசாணையை எதிர்த்து நீதிமன்றம் சென்றால் இந்த அரசாணையை ரத்து செய்யும் வாய்ப்பு உள்ளது எனவும் மனிதநேய மக்கள் கட்சி அன்றே கூறியிருந்தது. அன்றே தமிழக அரசு தாமிர உருக்காலையைத் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று கொள்கை முடிவு எடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டிருந்தால் நீதிமன்றங்கள் அந்த முடிவில் தலையிட்டிருக்க முடியாது.

எனவே, தூத்துக்குடி மக்களின் அரும்பெரும் தியாகம் மதிக்கப்பட வேண்டுமென்றால், தூத்துக்குடியைக் காப்பாற்ற வேண்டுமெனில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்குத் தமிழகத்தில் தாமிர உருக்காலைக்கு அனுமதியில்லை என அமைச்சரவை உடனே கூடி தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து தீர்மானம் நிறைவேற்றி அதை, வரும் சட்டமன்றக் கூட்டத் தொடரிலும் சட்டமாக நிறைவேற்ற வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்" என எச்சரிக்கை விடுத்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க