வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (28/11/2018)

கடைசி தொடர்பு:19:40 (28/11/2018)

`பள்ளிக்குள் இப்படி நடந்துகொள்ளலாமா?’ - தலைமை ஆசிரியருக்கு விழுந்த தர்மஅடி

நாகர்கோவிலில் அரசுப் பள்ளியில் பெண்ணிடம் நெருக்கமாக இருந்த தலைமை ஆசிரியருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். இதையடுத்து தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

அரசு பள்ளி தலைமையாசிரியர் சுதாகர்

நாகர்கோவில் அருகே பார்வதிபுரத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் சுதாகர். இதேபோல் தோவாளை பகுதியில் அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியபோது மாணவிகளிடம் தவறாக நடந்ததாக சஸ்பென்ட் செய்யப்பட்டவர் சுப்பு. சுதாகரும் சுப்புவும் நண்பர்கள். இந்த மாதத்தின் ஒரு சனிக்கிழமையில் தலைமை ஆசிரியர் சுதாகர் பள்ளிக்கு வந்துள்ளார். அவருடன் சுப்புவும் வந்துள்ளார். அப்போது ஒரு பெண், பள்ளிச் சீருடை அணிந்த சிறுவனுடன் தலைமை ஆசிரியர் அறைக்குள் நுழைந்திருக்கிறார். சிறிது நேரத்தில் சிறுவன், தன் அம்மாவைத் தலைமை ஆசிரியர் அறைக்குள் வைத்து பூட்டிவிட்டார் எனக் கத்தியிருக்கிறான். அக்கம் பக்கத்தினர் பள்ளியில் சென்று பார்த்தபோது தலைமை ஆசிரியர் சுதாகர், பெண்ணுடன் தனி அறையில் இருந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியினர் தலைமை ஆசிரியர் சுதாகர் மற்றும் அவரின் நண்பர் சுப்பு ஆகியோரைத் தாக்கியுள்ளனர். என்ன நடந்தது எனப் பெண்ணிடம் கேட்டதற்கு, ``மகனைப் பள்ளிக்கு அழைத்து வந்தபோது திடீரென வகுப்புக்குள் வைத்து என்னைப் பூட்டிவிட்டார். அவமானம் கருதி நான் சத்தம்போடாமல் இருந்துவிட்டேன்" என்றார்.

சுதாகரின் நண்பர் சுப்பு

``உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக ஒரு சனிக்கிழமையில் பள்ளியில் வேலைநாள் வைப்பது வழக்கம். தலைமை ஆசிரியர் சுதாகர் பிற ஆசிரியர்களிடமும், சத்துணவு அமைப்பாளரிடமும் பதிவேடுகளில் முதல் நாளே கையெழுத்துகளை வாங்கியுள்ளார். பள்ளியின் மொத்த வேலை நாள்களை ஈடு செய்ய வேண்டும் என்பதால் வகுப்புகள் சனிக்கிழமைகளில் நடத்த வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவு இருப்பதால் இந்தக் கையெழுத்து பெறப்படுகிறது. ஆனால், நீங்கள் யாரும் வகுப்பு எடுக்க பள்ளிக்கு வர வேண்டாம், மாணவர்களுக்கும் விடுமுறை எனக் கூறிவிடுங்கள் எனக் கூறியிருக்கிறார். ஆளில்லாத பள்ளிக்கு சனிக்கிழமை காலை 10 மணிக்குத் தலைமை ஆசிரியர் சுதாகர் வந்துவிட்டார். அவர் வந்த சிறிது நேரத்தில் அவரின் நண்பர் சுப்பு அங்கு வந்தார். அவருடன் பெண் ஒருவர் தன் மகனுடன் வந்திருந்தார். அந்த சிறுவன் பள்ளிச் சீருடையில் இருந்தான்.

இளம் பெண் பள்ளி தலைமை ஆசிரியர் அறைக்குச் சென்றதும், சுதாகர் அறையை மூடிவிட்டார். தாயை அறைக்குள் விட்டு வெளியே கதவை பூட்டியதைக் கண்டதும் சிறுவன் அழத்தொடங்கினான். சிறுவனை அழைத்து வந்த ஆசிரியர் சுப்பு, அருகே உள்ள டீக்கடைக்கு மாணவனை அழைத்துச் சென்று தின்பண்டம் வாங்கிக் கொடுத்து சமாதானப்படுத்த முயன்றுள்ளார். ஆனாலும், சிறுவன் அம்மாவை அறைக்குள் வைத்துப் பூட்டிவிட்டார்கள் என்று கத்தி ரகளை செய்யத் தொடங்கினான். இதனால் ஆட்டோ ஸ்டாண்டில் இருந்தவர்கள், கடைக்காரர்கள் என்ன நடந்தது என அங்கு கூடி மாணவனிடம் விசாரித்தார்கள். மாணவன் கூறிய தகவலின்படி பொதுமக்கள் அறையைத் திறந்து பார்த்தபோது இளம்பெண்ணுடன் தலைமை ஆசிரியர் சுதாகர் நெருக்கமாக இருந்ததைப் பார்த்திருக்கிறார்கள். ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் தலைமை ஆசிரியர் சுதாகர் மற்றும் சுப்புவை தாக்கியுள்ளனர். இதைச் சிலர் வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் பரப்பினர். இதுகுறித்து சி.இ.ஓ-வுக்கு புகார் சென்றது. சி.இ.ஓ விசாரணை நடத்தி பள்ளி தலைமை ஆசிரியர் சுதாகரை சஸ்பெண்ட் செய்தார்" என்கிறார்கள் பள்ளிக் கல்வித்துறை வட்டாரத்தைச் சேர்ந்த சிலர்.

குமரி மாவட்டத்தில் மாணவிகளிடம் சில ஆசிரியர்கள் அத்துமீறும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கும் நிலையில் பள்ளிக்குள் வைத்தே தலைமை ஆசிரியர் பெண்ணிடம் நெருக்கமாக இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.