வெளியிடப்பட்ட நேரம்: 17:49 (28/11/2018)

கடைசி தொடர்பு:18:01 (28/11/2018)

`ஆதாரங்கள் வலுவாக இருக்கின்றன!’ - அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகளுக்கு ஜாமீன் மறுப்பு

கபாலீஸ்வரர் கோயிலில் சிலை காணாமல்போன விவகாரத்தில் முத்தையா ஸ்தபதி உட்பட மூவருக்கு முன்ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருமகளின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இருந்த புன்னைவனநாதர் சிலை மாற்றப்பட்டிருப்பதாக வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரிக்க உத்தரவிட்டனர். 2003-ம் ஆண்டு இந்தக் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றபோது  அங்கிருந்து சிலை மாற்றப்பட்டிருக்கலாம் எனத் தெரியவந்தது. இதையடுத்து, அப்போது கோயிலுக்குத் தொடர்புடைய நபர்கள் கைதாகலாம் என்றிருந்தநிலையில், அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோயில் குருக்களிடமும் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தொடர்ந்து விசாரணை நடத்தினார்.

இதற்கிடையே அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் தனபால், ஸ்தபதி முத்தையா, அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டிருந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் ஆணையர் தனபால், ஸ்தபதி முத்தையா ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்கியது உயர் நீதிமன்றம். அதேநேரம், திருமகளுக்கு எதிரான விசாரணையில், அவருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருப்பதால், அவருடைய முன்ஜாமீன் மனு தள்ளுபடிசெய்து உத்தரவிட்டது நீதிமன்றம். முன்ஜாமீன் பெற்றவர்களுக்கு எதிராக ஆதாரம் கிடைத்தால், போலீஸார் நீதிமன்றத்தை நாடி முன்ஜாமீனை ரத்து செய்யலாம்'' என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.