வெளியிடப்பட்ட நேரம்: 19:44 (28/11/2018)

கடைசி தொடர்பு:19:44 (28/11/2018)

திருச்சி கருத்தரங்கம் விவகாரம்: ஹெச்.ராஜா கிளப்பிய சர்ச்சைக்குத் தொடரும் எதிர்ப்பு!

``கஜா புயல் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டியிருப்பதால், கருத்தரங்கம் தள்ளி வைக்கப்படுகிறது" எனக் காரணம் கூறியிருக்கிறது கல்லூரி நிர்வாகம். இதற்குத் தமிழ் ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

திருச்சி கருத்தரங்கம் விவகாரம்: ஹெச்.ராஜா கிளப்பிய சர்ச்சைக்குத் தொடரும் எதிர்ப்பு!

திருச்சியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியின் தமிழாய்வுத் துறையினர், வருகிற டிசம்பர் 6, 7 தேதிகளில் `தமிழ் இலக்கியப் பதிவுகளில் பெண் வன்கொடுமைகள்' என்கிற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் ஒன்றினை ஒருங்கிணைத்திருந்தனர். இதில் மாணவர்கள், கல்வியாளர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டு வெவ்வேறு தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகளை வழங்க இருந்தனர். கருத்தரங்குக்கான அறிவிப்பும் அதில், பேசப்படவிருந்த தலைப்புகளும் அண்மையில் வெளியிடப்பட்டிருந்தன. இந்நிலையில் கருத்தரங்கு நடப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தார், பி.ஜே.பி.-யின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா. இதற்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும், ``தமிழக அரசு தலையிட்டு இந்த நிகழ்ச்சி நடக்காமல் பார்த்துக்கொள்ளும்" என்று ட்வீட் செய்திருந்தார். இதையடுத்து கல்லூரி நிர்வாகம், ``கஜா புயல் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டியிருப்பதால், கருத்தரங்கம் தள்ளி வைக்கப்படுகிறது" எனக் காரணம் கூறியிருக்கிறது. இதற்குத் தமிழ் ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில், மக்கள் சிவில் உரிமைக் கழகமும் (PUCL) பன்னாட்டுக் கருத்தரங்கை தடைசெய்யக் கோருவது குறித்து தனது கண்டனத்தைப் பதிவுசெய்திருக்கிறது. 

சர்ச்சையைக் கிளப்பிய ஹெச்.ராஜா

இதுகுறித்து மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் மாநிலத் தலைவர் கண.குறிஞ்சியிடமும், மாநிலப் பொதுச் செயலர் க.சரவணனிடமும் பேசினோம். ``கருத்தரங்குக்குக் கொடுக்கப்பட்ட மாதிரித் தலைப்புகள், மதநூல்களை மட்டுமல்லாமல் சங்க இலக்கியங்கள் முதல் நவீன இலக்கியங்களையும் உள்ளடக்கியவை. என்ன தலைப்பில் ஆய்வுக் கட்டுரைகள் வரப்பெற்றன என்பதோ, அவற்றில் எந்தக் கட்டுரைகள் இறுதிசெய்யப்பட்டன என்பதோ தெரியாத சூழலில், இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தின் கருத்து என்னவென்றுகூடக் கேட்காமல், அவசர கதியில் ஹெச். ராஜா, நிகழ்ச்சிக்குத் தடைகோருவதும், அதை இன்னொருவர் பகிர்ந்து கோரிக்கைவைப்பதும், அதை ஏற்று, தமிழக அமைச்சர் ஒருவர், தமிழக அரசு தலையிட்டு இந்த நிகழ்ச்சி நடக்காமல் பார்த்துக்கொள்ளும் என்று அறிவிப்பதும், தற்போது, இந்து முன்னணி தலைவர் கல்லூரி உரிமத்தை ரத்துசெய்யக் கோருவதும், அடிப்படை நீதிக்கும், அரசியல் சாசன விழுமியங்களுக்கும் எதிரானது. 

மாஃபா பாண்டியராஜன்அமைச்சரின் ட்விட்டர் பதிலையடுத்தே, கல்லூரி நிர்வாகம், நிகழ்ச்சியைத் தள்ளிவைத்திருப்பதாகத் தோன்றுகிறது. இந்த விவகாரத்தில், தமிழக அரசு, கல்லூரியிடம் முறையாக எந்த விளக்கமும் கேட்கவில்லை. ட்விட்டர் பக்கங்களில், அரசின் முடிவுகள் எடுக்கப்படும் மிகத் தவறான முன்னுதாரணத்துக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வித்திட்டுள்ளார். இது, ஆட்சியியல் விழுமியங்களுக்கு எதிரானது; கண்டிக்கத்தக்கது.

ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்ட ஆய்வாளர்கள் கலந்துகொள்ளவிருந்த ஒரு கருத்தரங்குக்குத் தடைகோருவதும், அதை நடத்தமுடியாத வகையில் அச்சமான சூழலை உருவாக்குவதும், அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையான பேச்சுரிமை மற்றும் கருத்துரிமையின் குரல்வளையை நெரிக்கும் முயற்சிகளன்றி வேறல்ல. பெண்களுக்கு எதிரான வன்முறையும், ஆணாதிக்கப் போக்கும் தமிழிலக்கியங்களில் இருந்தால், அதை வெளிப்படுத்துவது ஆய்வுலகின் கடமையே. அது, எந்த வகையிலும் தவறானது அல்ல. அதற்கு எதிர்க் கருத்துகள் இருந்தால், அதைப் பதிவிடுவதுதான் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் அணுகுமுறையாக இருக்க முடியும். மாறாக, மாற்றுக் கருத்துகளைக் கூறவே கூடாது என்பது கருத்தியல் வன்முறையாகும். அதைத் தனிநபர் செய்தாலும், அரசு செய்தாலும், அது கடும் கண்டனத்துக்குரியது. 

`வெளிப்படுத்தும் கருத்தின்மூலம் உருவாகும் அபாயம், நேரடியாகவும், உடனடியாகவும் சமூக நலனைப் பாதிக்கும்படி இருந்தால் மட்டுமே, 19(2)ன்படி,  பேச்சுரிமை மற்றும் கருத்துரிமையைக் கட்டுப்படுத்த முடியும் என்றும், அது யூகத்துக்குட்பட்டதாகவோ, நீண்டகால தாக்கத்தைப் பற்றியதாகவோ இருந்தால், கருத்துரிமையைக் கட்டுப்படுத்தக் கூடாது’ என்றும் உச்ச நீதிமன்றம் வழக்கொன்றில் {Ramesh v. Union of India AIR 1988 SC 775} அளித்த தீர்ப்பு இங்குக் குறிப்பிடத்தக்கது.

கண.குறிஞ்சிஇலக்கியங்களை விருப்புவெறுப்பின்றி ஆய்வுசெய்து, உண்மைகளைத் தெரிந்துகொள்வதற்கான முயற்சியை வரவேற்காமல், அதை ஹெச்.ராஜா போன்றவர்கள் மதச் சிக்கலாக்குவதையும், சிறுபான்மை - பெரும்பான்மை என உள்நோக்கத்துடன் பேசுவதையும் வெறுப்புஉணர்வைத் தூண்டும் முயற்சிகள் என்றே நாங்கள் கருதுகிறோம். இதுபோன்ற வெறுப்புஉணர்வைத் தூண்டும் பேச்சுகள் தவிர்க்கப்பட வேண்டும். பன்னாட்டுச் சட்டங்களும், குறிப்பாக ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றமும், அதிகரித்துவரும் பன்மைச் சமூகம் மற்றும் கலாசாரத்தில், பொறுப்புஉணர்வுடன் பேச்சுரிமையைப் பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிடுகின்றன. இதேபோன்று, உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டதற்கிணங்க {Pravasi Bhalai Sangathan v. Union of India (AIR 2014 SC 1591)}, தேசியச் சட்ட ஆணையம், `வெறுப்புரை’ குறித்துக் கடந்த மார்ச் 2017-ல் வெளியிட்டுள்ள அறிக்கையில் (அறிக்கை எண்: 267), வெறுப்புரையைத் தண்டிக்கும் வகையில் சட்டத் திருத்தங்களை வலியுறுத்தியுள்ளது என்பதையும் இங்குக் குறிப்பிட்டாக வேண்டும்.

அரசியல் சாசனத்தின் சாராம்சமான, `முகப்புரை (Preamble)’ வலியுறுத்தும் சமஉடைமை (Socialism) மற்றும் மதச்சார்பின்மை (Secularism) போன்ற விழுமியங்கள் தற்போது இருக்கும் ஆட்சியாளர்களால் தொடர்ந்து கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றன. இந்த அரசியலின் தொடர்ச்சியாகவே, கருத்தரங்குக்கு மதச் சாயம் பூச நினைக்கும் முயற்சிகளை நாம் பார்க்க வேண்டியுள்ளது.

க.சரவணன்எனவே, தள்ளிவைக்கப்பட்ட கருத்தரங்கை, கல்லூரி நிர்வாகம் முறையாகத் தேதி அறிவித்து நடத்த வேண்டும். அதற்குத் தமிழக அரசு முழு ஆதரவையும், பாதுகாப்பையும் அளிக்க வேண்டும். ஒருவேளை தமிழக அரசின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லையெனில், கல்லூரி நிர்வாகம் நீதிமன்றத்தை அணுகுவதே சரியான வழிமுறையாக இருக்கும். மாறாக, கருத்தரங்கை ரத்துசெய்யும் முடிவுக்குக் கல்லூரி நிர்வாகம் வருமானால், ஆணாதிக்கத்துக்கும், மதவெறுப்புஉணர்வுக்கும், அது மண்டியிடுகிறது என்று கருதப்படும் ஆபத்து உள்ளது என நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

ஜே.எஸ். மில், `விடுதலை’ குறித்த தன்னுடைய படைப்பில், `ஒரே ஒரு மனிதரைத் தவிர, உலகம் முழுவதும் ஒரு கருத்துகொண்டதாகவும், அந்த ஒரு மனிதர் மட்டும் மாற்றுக் கருத்துகொண்டவராகவும் இருந்தால்கூட, மனிதக்குலம் அந்த ஒருவரை வாயடைக்கச் செய்வதில் நியாயமில்லை. மாறாக, அந்த ஒரு மனிதரின் கருத்து உலகம் முழுவதையும் வாயடைக்கச் செய்யும் வலுவுள்ளதாக இருந்தால், அந்தக் கருத்தை வெளிப்படுத்தும் நியாயம் இருக்கவே செய்கிறது’ என்று கருத்துச் சுதந்திரத்தின் அவசியத்தைக் குறிப்பிடுவதை இங்கு நினைவுகூருகிறோம்.

இந்தக் கருத்தரங்கு விவகாரத்தில் மட்டுமல்லாமல், மத நல்லிணக்கம் மற்றும் பாலினச் சமத்துவத்துக்கு எதிரான எந்தவொரு முயற்சியையும் எதிர்த்து, சமரசமற்ற போராட்டத்தை ஜனநாயகச் சக்திகள் முன்னெடுக்க வேண்டும் என வற்புறுத்துகிறோம்" என்றனர், மிகத் தெளிவாக. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க