வெளியிடப்பட்ட நேரம்: 19:13 (28/11/2018)

கடைசி தொடர்பு:19:13 (28/11/2018)

காதலுக்கு குட்பை சொன்னதால் ஆத்திரம்! - காதலன் குடும்பத்தை தெறிக்கவிட்ட காதலி 

காதலன் வீட்டில் கொள்ளையடித்த காதலி கைது

காதலுக்கு காதலன் குட்பை சொன்னதால் ஆத்திரமடைந்த காதலி, காதலன் வீட்டுக்குச் சென்று அவரின் அம்மாவைத் தாக்கிவிட்டு பணத்தைக் கொள்ளையடித்துள்ள சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் நகரைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரின் மனைவி கோவிந்தம்மாள் (55). இவர்களின் மகன் சக்திவேல். கடந்த 10-ம் தேதி கோவிந்தம்மாள் வீட்டில் தனியாக இருந்தபோது ஆண், பெண் என இருவர் அங்கு வந்தனர். அவர்கள், தங்களை இன்ஜூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றுவதாகக் கோவிந்தம்மாளிடம் கூறி அறிமுகப்படுத்தியுள்ளனர். பிறகு சக்திவேலின் கார் குறித்து விவரங்களைக் கேட்டுள்ளனர். 

இந்தச் சமயத்தில் கோவிந்தம்மாளின் கை, காலை கயிற்றால் கட்டிய அவர்கள், சத்தம்போடாமலிருக்க வாயையும் பொத்தியுள்ளனர். அதன்பிறகு, பீரோவை உடைத்து 4 லட்சம் ரூபாயைக் கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றனர். அதன் பிறகு கோவிந்தம்மாளை மீட்டு அவரிடம் என்ன நடந்தது என்று குடும்பத்தினர் விசாரித்தனர். அப்போது அவர் முழுவிவரத்தைக் கூறினார். 

இதையடுத்து திருவான்மியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. கோவிந்தம்மாள் கூறிய தகவலின்படி போலீஸார், சென்னை புதுப்பேட்டையைச் சேர்ந்த அருணகிரி, சரண்யா (29) ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் சிலரை போலீஸார் தேடிவருகின்றனர். 

போலீஸார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சரண்யாவும் சக்திவேலும் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். அதன்பிறகு இவர்களின் காதலில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், சக்திவேல், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சரண்யா, காதலன் குடும்பத்தை பழிவாங்க திட்டமிட்டு கோவிந்தம்மாளைக் கட்டிப்போட்டு பணத்தைக் கொள்ளையடித்துள்ளார்" என்றனர்.