வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (28/11/2018)

கடைசி தொடர்பு:20:42 (28/11/2018)

`தி.மு.க வெற்றி பெற பாடுபடுவேன்' - வைகோ பேட்டி!

`நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் தி.மு.க வெற்றிபெற பாடுபடுவேன்’ என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

வைகோ

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு தி.மு.க பொருளாளர் துரைமுருகன் அளித்த நேர்காணலில், `ம.தி.மு.க, வி.சி.க ஆகிய கட்சிகள் தி.மு.க-வுடன் கொள்கை அளவில் ஒத்துப்போயிருந்தாலும் அவை கூட்டணியில் இருப்பதாக அர்த்தம் இல்லை. தேர்தல் தேதி அறிவித்த பின்பே கூட்டணிகுறித்து பேசப்படும் ' எனப் பேசியிருந்தார். இவரின் பேச்சு தி.மு.க-வுடன் தொடர் நட்பில் இருந்த காங்கிரஸ், ம.தி.மு.க, வி.சி.க உள்ளிட்ட கட்சிகளுக்கு ஷாக் கொடுத்தது. இருப்பினும், `கூட்டணிகுறித்து துரைமுருகன் கூறிய கருத்தைத் தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது' எனப் பேசினார் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர். அதேநேரம், கூட்டணி விவகாரத்தில் இந்தக் கட்சிகள் கலக்கத்தில் உள்ளதாக நிர்வாகிகள் தரப்பில் பேச்சுகள் எழுந்தன. சர்ச்சையைத் தொடர்ந்து தி.மு.க தலைவர் ஸ்டாலினை வி.சி.க தலைவர் திருமாவளவன் நேற்று சந்தித்துப் பேசினார். 

தொடர்ந்து இன்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ - ஸ்டாலின் சந்திப்பு நடைபெற்றது. அண்ணா அறிவாலயத்தில் நடந்த இந்த சந்திப்பின்போது தி.மு.க பொருளாளர் துரைமுருகனும் உடனிருந்தார். சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார் வைகோவிடம் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ``திராவிடர் கழகத்துடன் இணைந்து ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளதுக்கு ஆதரவு கேட்டு ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தேன். அப்போதுதான், துரைமுருகன் கூட்டணி குறித்துப் பேசினார். அடுத்த நொடியே ஸ்டாலின் எங்களுக்கு ஆதரவு கடிதம் அனுப்பினார். அந்த விளக்கக் கடிதம்தான் எங்கள் கூட்டணிக்கான விளக்கம். நாங்கள் தி.மு.க கூட்டணியில்தான் உள்ளோம். நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளுக்கும், இடைத்தேர்தலில் 20 தொகுதிகளுக்கும் தி.மு.க வெற்றிபெற பாடுபடுவேன்" என்று கூறினார். 

இதற்கிடையே, ஸ்டெர்லைட் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், ``முன்பு நடந்த வழக்கு விசாரணையின்போது ஸ்டெர்லைட் வழக்கறிஞர் அரிமா சுந்தரம் ஸ்டெர்லைட்டை மூடியதால் நிறைய நஷ்டம் ஆகிவிட்டது என முறையிட்டார். அப்போது இருந்த நீதிபதி சுதந்திர குமார் ``ஸ்டெர்லைட்டை நான் திறக்க உத்தரவிடப் போகிறேன்; கொஞ்சம் பொறுங்கள்'' எனக் கூறினார். என் வாழ்க்கையிலேயே ஒரு தரப்பு தீர்ப்பு தரப்போவதை முன்னரே சொன்ன ஒரே நீதிபதி இவர்தான். ஸ்டெர்லைட் ஆலைக்கு அ.தி.மு.க அரசு கைக்கூலியாக வேலை பார்க்கிறது. தற்போது தொடரப்பட்டுள்ள வழக்கில் பசுமை தீர்ப்பாயத்தின் நீதிபதி கோயல் கண்டிப்பாக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உத்தரவிடுவார். இது எனக்குத் தெரியும். சுப்ரீம் கோர்ட்டில் இருந்து ஓய்வு பெற்ற அரைமணி நேரத்திலேயே மோடி அரசால் பசுமைத் தீர்ப்பாயத்துக்கு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் கண்டிப்பாக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கச் சொல்வார் பாருங்கள்" என்று கூறினார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க