வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (28/11/2018)

கடைசி தொடர்பு:23:00 (28/11/2018)

`சாலையில் ஓடிய சாக்கடைக் கழிவு நீர்!’ - பெற்றோருடன் சாலையில் அமர்ந்த தொடக்கப்பள்ளி மாணவர்கள்

திருப்பூர் அருகே அரசு தொடக்கப்பள்ளியை ஒட்டிச் செல்லும் சாக்கடையில் கடுமையான துர்நாற்றம் வீசுவதால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மாணவர்கள் போராட்டம்

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அங்கேரிபாளையம் பகுதியில் இயங்கி வரும் அரசு தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5-ம்  வகுப்பு வரையில் சுமார் 300 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்தநிலையில், பள்ளிக்கூடத்தின் சுற்றுச்சுவரை ஒட்டியிருக்கும் பகுதியில் சாக்கடை கால்வாய் நிரம்பி வழிந்து கழிவுநீரானது பள்ளிக்குள் புகுந்துவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் அடிப்பதால், மாணவர்களால் வகுப்பறைக்குள் அமர்ந்து பாடம் படிக்கவே முடியாத நிலைமையும் ஏற்பட்டிருக்கிறது. அத்துடன் பள்ளி வளாகத்தில் அமைந்திருக்கும் கழிவுநீர் தொட்டிகளும் உடைந்துபோய் கழிவுநீர் வெளியேறிக்கொண்டு இருந்திருக்கிறது.

இதனால் அப்பகுதி முழுவதும் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டிருப்பதாகவும், சுகாதாரத்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து அப்பகுதியை சுத்தப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் அப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் தங்களின் பெற்றோர்களுடன் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர், மறியலில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். அதன்பிறகே சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்களும் பெற்றோர்களும்  போராட்டத்தை முடித்துக்கொண்டு கலைந்து சென்றனர். பின்னர் உடனடியாக மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு பள்ளியின் சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. தொடக்கப் பள்ளி மாணவர்களின் இந்தப் போராட்டம், திருப்பூர் மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.