கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு ரூ.10 கோடி நிவாரண நிதி - கேரள முதல்வர் பினராயி விஜயன் | Kerala CM announce relief fund for tamilnadu

வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (28/11/2018)

கடைசி தொடர்பு:07:08 (29/11/2018)

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு ரூ.10 கோடி நிவாரண நிதி - கேரள முதல்வர் பினராயி விஜயன்

தமிழகத்தில் கடந்த வாரம் கஜா புயல் தாக்கியதில் டெல்டா மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பல கிராமங்களில் மின் இணைப்பைச் சரி செய்ய ஒரு மாதமாகும் என்கிறார்கள். பல கிராமங்கள் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன. மீட்புப் பணிகள் துரிதமாக நடந்தாலும், ஏற்பட்டிருக்கும் சேதம் மிக அதிகம் என்பதால், எல்லாம் சரி ஆக இன்னும் சில காலம் ஆகும். பல இடங்களில் இளைஞர்கள் கூட்டாகச் சேர்ந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

கஜா

தமிழக அரசு மத்திய அரசின் நிவாரண நிதியையும் எதிர்பார்த்திருக்கப் பலர் தங்களால் ஆன உதவியை வழங்கி வருகின்றனர். தனிப்பட்ட முறையிலும், குழுவாகவும் தங்களால் ஆன உதவிகளை டெல்டா மக்களுக்குச் செய்து வருகின்றனர். இந்த நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழகத்துக்கு நிவாரண உதவிகளை அறிவித்துள்ளார். நேற்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல், கேரள அரசு தமிழகத்துக்கு உதவ வேண்டும் எனவும் கூறியிருந்தார். 

பினராயி விஜயன்

இந்த நிலையில், இன்று கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்விட்டரில்,  ``கஜா புயலில் பாதிக்கப்பட்ட தமிழக சகோதரர்களுக்குக் கேரள மக்களின் ஆதரவைத் தெரிவிக்கிறோம். புதன் கிழமை அமைச்சரவைக் கூடி அவசர உதவியாகக் 10 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு வழங்க முடிவு செய்துள்ளோம்.. உணவு,  ஆடைகள் உட்பட 14 லாரி அவசரப் பொருள்கள் ஏற்கெனவே அனுப்பி வைத்துள்ளோம்.

ஆறு மருத்துவ குழுவும் கேரளா மின்சார வாரியத்தைச் சேர்ந்த 72 ஊழியர்களும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தேவை என்றால் மேலும் உதவியை அனுப்புவோம் என்று தமிழக அரசுக்கு உத்தரவாதம் அளித்துள்ளோம்” எனப் பதிவிட்டுள்ளார். 

கமல்;

இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள கமல்ஹாசன்,  ``கஜா புயல் நிவாரண நிதியாக தமிழகத்துக்கு கேரள அரசு சார்பாக ரூபாய் 10 கோடியை அளித்தற்குக் கேரள முதல்வருக்கு நன்றி. வேண்டுகோள் வைத்த 24 மணி நேரத்துக்குள் துரிதமாக நடவடிக்கை எடுத்த உங்கள் செயல்பாடு மனிதத்தின் வெளிப்பாடு!” என்று பதிவிட்டுள்ளார்.