வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (29/11/2018)

கடைசி தொடர்பு:07:12 (29/11/2018)

ராமநாதபுரம் சட்டக் கல்லூரிக்கு நிரந்தர கட்டடம் - சட்டத்துறை செயலருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

ராமநாதபுரம் மாவட்டத்தில் அடிப்படை வசதிகளுடன் கூடிய அரசு சட்டக் கல்லூரிக்கான நிரந்தரக் கட்டடம் கட்டக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக சட்டத்துறை செயலர் பதில் அளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

தற்காலிகமாக இயங்கி வரும் ராமநாதபுரம் சட்டக் கல்லூரி கட்டிடம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய சட்டக் கல்லூரி கடந்த ஆண்டு அக்டோபர்  மாதம் திறக்கப்பட்டது. சட்டக் கல்லூரி கட்டுவதற்கான இடம் தெரிவு செய்யப்பட்ட நிலையில் அதற்கான நிதி ஒதுக்கப்படாததால் கட்டுமானப் பணிகள் துவங்கவில்லை. ராமநாதபுரத்தை அடுத்துள்ள பெருங்குளம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக் கட்டடத்தில் சட்டக் கல்லூரி தற்காலிகமாக இயங்கி வருகிறது. 
 
இந்த நிலையில், ராமநாதபுரம் சேதுபதி நகரைச் சேர்ந்த திருமுருகன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ராமநாதபுரம் சட்டக் கல்லூரிக்கு நிரந்தர கட்டடம் கட்ட உத்தரவிடக்கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ``ராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி கட்டடத்தில் அரசு சட்டக் கல்லூரி தற்காலிகமாக இயங்கி வருகிறது. இங்கு தற்போது 300 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். வரும் கல்வியாண்டில் மாணவர்களின் சேர்க்கை துவக்கப்பட்டால் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை மேலும் கூடும்.

இந்த சட்டக் கல்லூரி துவக்கப்பட்டு 2 ஆண்டுகள்  ஆன நிலையில் நிரந்தரக் கட்டடம் கட்டப்படவில்லை. தற்போதைய கல்லூரிக்குச் சாலை வசதி, மாணவ, மாணவிகளுக்கான தனித் தனி தங்கும் விடுதிகள், நூலகம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. மேலும் சட்டக் கல்லூரிக்கு அருகிலேயே டாஸ்மாக் கடை உள்ளது. போதை ஆசாமிகளால் மாணவிகளுக்குத் தொல்லை ஏற்படுகிறது. தற்போதைய கல்லூரியில் உள்ள நூலக அறையும் பூட்டியே கிடக்கிறது. எனவே, அனைத்து வசதிகளுடன் கூடிய சட்டக் கல்லூரிக்கான நிரந்தரக் கட்டடம் கட்ட உத்தரவிட வேண்டும்'' எனக் கோரியிருந்தார்.

இந்த மனு  நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது விழுப்புரம் மற்றும் தர்மபுரியில் உள்ள சட்டக் கல்லூரிகளும் தற்காலிக கட்டடத்தில் இயங்குவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இது தொடர்பாக தமிழக சட்டத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்தி வைத்தனர்.