வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (29/11/2018)

கடைசி தொடர்பு:07:15 (29/11/2018)

கஜா புயலில் சேதமடைந்த கொடைக்கானல் பகுதிகளைச் சீரமைக்க மனு - தமிழக அரசுக்கு நோட்டீஸ்

கஜா புயலால் சேதமடைந்த கொடைக்கானல் சாலைகளைச் சீரமைக்க கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கொடைக்கானல் சாலை

 உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனோஜ் இம்மானுவேல் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், `` கஜா புயலால்  தஞ்சை, புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், திண்டுக்கல், கடலூர் ஆகிய மாவட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், அடுக்கம், காமனூர், கிழக்கு செட்டிபட்டி, கூக்கால், மன்னவனூர், பூம்பாறை, பூண்டி, தாண்டிக்குடி உட்பட பல கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. கொடைக்கானல் செல்லும் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் அப்பகுதியில் வசித்துவரும் பொதுமக்கள் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு இல்லாமல் தவிக்கின்றனர்.  எனவே, கஜா புயலால் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் மற்றும் வீடு, மரங்கள் மற்றும் விவசாயம் பாதிக்கபட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், சாலை உள்ளிட்ட வசதிகளை உடனடியாக  செயல்படுத்த  தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என   தனது மனுவில் கூறிருந்தார்.

 

கஜா

மனுவை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும்,  கொடைக்கானல் மற்றும் அதன் சுற்று கிராமங்களில் கஜா புயல் பாதிப்பு மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை  டிசம்பர் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.