வெளியிடப்பட்ட நேரம்: 05:30 (29/11/2018)

கடைசி தொடர்பு:10:19 (29/11/2018)

``திருவாரூர் மாவட்டத்தில் 1 லட்சம் கான்க்ரீட் வீடுகள் கட்டித்தரப்படும்” - உறுதியளித்த முதல்வர்

கஜா புயலால் முழுவதுமாக வீடுகளை இழந்த மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என முதல்வர் பழனிசாமி உறுதி அளித்தார்.  

முதல்வர் பழனிசாமி

தமிழக  முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நாகப்பட்டினம்  மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டார்  அதன்பின்னர் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த மேலமருதூர் வந்தடைந்தார். அப்போது அங்கு கூடியிருந்த மக்களைச் சந்தித்தார்.

இதைத் தொடர்ந்து தென்பாதி கிராமத்தில் சம்பா சாகுபடி நெல் வயலைப் பார்வையிட்டார். கட்டிமேடு அரசினர் உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த நிவாரண முகாமுக்குச் சென்ற முதலமைச்சர் அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் கூறியதுடன், 750 குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண உதவிப் பொருள்களை வழங்கினார். பின்னர் கஜா புயல் தாக்கியதில் திருவாரூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சேத விவரங்களைத் தெரிவிக்கும் புகைப்படங்களைப் பார்வையிட்டார்.

பின்னர் திருத்துறைப்பூண்டி தனியார் மண்டபத்தில் தங்கிருந்த மக்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து மணலி கிராமத்தில் முருகேசன் என்பவரது சம்பா நெல் வயலைப் பார்வையிட்ட முதலமைச்சர் பழனிசாமியிடம் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் ரங்கநாதன் உள்ளிட்ட விவசாயிகள் கஜா புயல் தாக்கியதில் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து தெரிவித்தனர். தொடர்ந்து மணலி மாங்குடி பகுதிகளிலும் கஜா புயல் சேதங்களையும் பாதிக்கப்பட்ட மக்களையும் பார்த்து ஆறுதல் கூறினார்.

பழனிசாமி

திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயல் பாதிப்பு பணிகளைப் பார்வையிட்ட பின்னர், முதல்வர் பழனிசாமி திருவாரூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர்,  ``கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 27 வகையான பொருள்கள் அடங்கிய நிவாரண உதவிப் பொருள்கள் வழங்கப்படும். இந்தப் பொருள்கள் அடுத்த ஐந்து நாள்களில் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும். 

குடிசை வீடுகள் முழுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்காக முதல் கட்டமாக ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். பகுதி பாதித்த வீடுகளுக்குச் சிறப்பு திட்டம் தீட்டப்பட்டு சீரமைக்கப்படும். கடலோரப் பகுதிகளில் படிந்துள்ள சகதிகளை அரசு செலவில் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மரங்களை வெட்டி அகற்றுவதற்கு உள்ளூர் மக்களுக்கு சுமார் 5 லட்சம் பேருக்கு தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் பணிகள் வழங்கப்படும்.

கஜா

கஜா புயல் பாதிப்பு நிவாரணப் பணிகளில் தமிழக அரசு முன்கூட்டியே செயல்பட்டுள்ளது. அமைச்சர்களைப் புயலுக்கு முன்னதாகவே அனுப்பி முன்னேற்பாடுகளைக் கவனித்தோம். புயல் பாதிப்புக்குப் பின்னரும் மற்ற துறை அமைச்சர்களை,  ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைப் பொறுப்பாளர்களாக நியமித்து புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வைத்துள்ளோம்.

அ.தி.மு.க அரசுக்கு உறுதுணையாக அ.தி.மு.க தொண்டர்களும் ஆங்காங்கே அரசின் திட்டங்கள் கிடைக்கவும், நிவாரணப் பொருள்களை வழங்கி மக்களுக்கு உதவி செய்யும் பணிகளில் ஈடுபட்டனர். மக்கள் அனைவரும் விரைவில் மின்சார வசதி வேண்டும் எனக் கோரி வருகின்றனர். அதற்கு ஏற்ப உள் மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், ஆந்திரா கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் பணியாளர்களை நியமித்து பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. மின்சார ஊழியர்கள் வயல்வெளி பகுதிகளில் சாய்ந்து விழுந்த மின் கம்பங்கள் நடுவதற்குப் பெருத்த சிரமத்தைச் சந்தித்து வருகிறார்கள்” என்றார்.