`பாலியல் தொல்லையால் ரவுடியைக் கொன்றேன்!’ - கைதான பெண் அதிர்ச்சி வாக்குமூலம் | I killed Rowdy because of sexual torcher!'-Woman statement

வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (29/11/2018)

கடைசி தொடர்பு:07:31 (29/11/2018)

`பாலியல் தொல்லையால் ரவுடியைக் கொன்றேன்!’ - கைதான பெண் அதிர்ச்சி வாக்குமூலம்

பாலியல் தொல்லை கொடுத்ததால் ரவுடியைக் கொன்றதாக கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

 ரவுடி

வேலூர் சத்துவாச்சாரி இந்திரா நகரைச் சேர்ந்தவர் தங்கராஜ் (35). ரவுடியான இவர் மீது கொலை உட்பட 30-க்கும் அதிகமான குற்ற வழக்குகள் உள்ளன. கடந்த 17-ம் தேதி இரவு குடிபோதையில் இருந்த தங்கராஜ், அதே பகுதியில் உள்ள தண்டுமாரி என்ற பெண் வீட்டுக்குள் புகுந்து தகராறில் ஈடுபட்டார். அப்போது, தண்டுமாரி மற்றும் அவரின் மகன், தங்கை ஆகியோர் சேர்ந்து ரவுடி தங்கராஜை தலையில் கல்லைப் போட்டு கொடூரமாகக் கொன்று தப்பிவிட்டனர். பின்னர், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்த தண்டுமாரி, வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டார். 

அவரை, சத்துவாச்சாரி போலீஸார் இரண்டு நாள்கள் கஸ்டடி எடுத்து கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். ரவுடி கொலை தொடர்பாக தண்டுமாரி திடுக்கிடும் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறுகையில், ``ரவுடி தங்கராஜ், தண்டுமாரியிடம் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். மேலும், தங்கராஜ் ஆசைக்கு தண்டுமாரி இணங்க மறுத்ததால்,  தொடர்ந்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். சம்பவத்தன்று இரவும், மது போதையில் வீட்டுக்குச் சென்று தண்டுமாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். என்னை விட்டுவிடு என்று மன்றாடினார் தண்டுமாரி.

ரவுடி தங்கராஜ் ஆக்ரோஷமாக தாக்கி பாலியல் தொல்லை அளித்ததால், அவரது தலையில் கல்லைப் போட்டு கொன்றுள்ளார் தண்டுமாரி. இந்த கொலையில் தன்னுடைய மகன் மற்றும் தங்கைக்கு சம்பந்தமில்லை. நான் தனியாக மட்டுமே கொலை செய்தேன் என்று தண்டுமாரி கூறியதாக போலீஸார் தெரிவித்தனர். இரண்டு நாள்கள் கஸ்டடி முடிந்ததால், தண்டுமாரி வேலூர் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார்.