``நான் வாழ்வதே ரசிகர்கள் பணத்தில்தான்!" - நடிகர் ராகவா லாரன்ஸ் #Gaja | I live in the money for the fans - actor ragava

வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (29/11/2018)

கடைசி தொடர்பு:07:34 (29/11/2018)

``நான் வாழ்வதே ரசிகர்கள் பணத்தில்தான்!" - நடிகர் ராகவா லாரன்ஸ் #Gaja

புதுக்கோட்டையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட வந்த நடிகர் ராகவா லாரன்ஸ், `நான் வாழ்வதே  ரசிகர்கள் கொடுத்த பணத்தில் தான், அதில் ஒரு பகுதியை பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன்’ என உருக்கமாகத் தெரிவித்தார்.

ராகவா லாரன்ஸ்


ஆலங்குடி பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட ராகவா லாரன்ஸ் செய்தியாளர்களிடம், ``வளமாக வாழ்ந்தவர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்டு நிவாரணம் கிடைக்குமா என்று சாலையில் நிற்பது வேதனை அளிக்கிறது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட 50 பேருக்கு வீடு கட்டிக்கொடுக்க திட்டமிட்டுள்ளேன். அதன் ஒரு பகுதியாக சமூகசேவகர் கணேசன் இல்லத்துக்குச் சென்று அவரைப் பார்த்தேன். அவரிடம் பணத்தை கொடுக்கவில்லை. ஆனால், வீடு கட்ட திட்டம் வரையப்பட்டு வருகிறது. இதைப் பார்த்து பலரும் முன்வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும். நான் வாழ்வது ரசிகர்கள் கொடுத்த பணத்தில்தான், தற்போது அவர்கள் துன்பமான நிலையில் இருக்கிறார்கள். என்னிடம் இருப்பதில் ஒரு பகுதியை அவர்களுக்குக் கொடுக்க நினைக்கிறேன்.

அரசியலுக்கு வரத் தனித் தகுதிகள் வேண்டும் என்று நினைக்கிறேன். நான் படிக்கவில்லை. மேலும், அரசியலுக்கு வர என்னிடம் தகுதி இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அதனால், நான் அரசியலுக்கு வரமாட்டேன். நான் ஆன்மிகவாதி. அதனால், தற்போது அரசியலில் இருப்பவர்களுக்கு அந்தத் தகுதி உள்ளதா என்பதைப் பற்றி கூற விருப்பம் இல்லை. திரைப்படத்துறையில் இருப்பவர்கள் ஏதேனும் ஒரு வகையில் உதவிகள் செய்து கொண்டுதான் உள்ளனர். அடுத்தகட்டமாக மரக்கன்றுகள் வழங்க ஆலோசனை செய்கின்றேன். இந்தப் புயல் பாதிப்பால் விவசாயிகள் மனமுடைந்து விடாமல், மீண்டும் மரங்களை வளர்க்க முன்வர வேண்டும்" என்று கூறினார்.