வெளியிடப்பட்ட நேரம்: 09:43 (29/11/2018)

கடைசி தொடர்பு:09:43 (29/11/2018)

``போலீஸார் குற்றவாளிகளை அடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” - முதல்வர் நாராயணசாமி

``போலீஸ் குற்றவாளிகளை அடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

நாராயணசாமி

புதுச்சேரியை அடுத்த தமிழகப் பகுதியான ரெட்டிச்சாவடியைச் சேர்ந்தவர் ஜெயமூர்த்தி. இவரை இரு சக்கர வாகனம் மற்றும் செல்போன் திருடியதாக சந்தேக வழக்கில் அழைத்துச் சென்ற பாகூர் போலீஸ் விசாரணைக்குப் பிறகு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தது. ஜெயமூர்த்திக்கு உடல் நலம் சரியில்லை என்று சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டு அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயமூர்த்தி உயிரிழந்தார். பாகூர் காவல் நிலைய எஸ்.ஐ ஜெயகுருநாதனும், சிறைக் காவலர்களும் தாக்கியதாலேயே ஜெயமூர்த்தி உயிரிழந்தார் என்று புகார் கூறிய உறவினர்கள் மருத்துவமனை எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து சர்ச்சையில் சிக்கிய எஸ்.ஐ ஜெயகுருநாதனை பணியிடைநீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்ட சீனியர் எஸ்.பி அபூர்வா குப்தா மற்ற அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

இதற்கிடையில் இந்தத் தாக்குதலைக் கண்டிக்கும் விதமாக காலாப்பட்டு சிறைக்குள் நேற்றிலிருந்து கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி, ``காவல்துறையினர் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு குற்றவாளிகளை அடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தவறு யார் மீது இருந்தாலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த வழக்கில் உதவி ஆய்வாளர் ஜெயமூர்த்தி பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தின் மீது நீதி விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறேன். மேலும், பிரேதப் பரிசோதனை நீதிபதி முன்னிலையில் நடைபெற வேண்டும்” என்று தெரிவித்தார். அதன்படி நீதிபதி சரண்யா முன்னிலையில் பிரேதப் பரிசோதனை செய்து ஜெயமூர்த்தியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இரண்டு நாள்களுக்கு முன்பு புதுச்சேரி காவலர் பயிற்சிப் பள்ளி விழாவில் கலந்துகொண்ட முதல்வர் நாராயணசாமி ``காவல்துறை அதிகாரிகளும், காவலர்களும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும். மக்களுக்காகதான் நாம், நமக்காக அவர்கள்  இல்லை என்ற உணர்வு இருக்க வேண்டும். மக்களின் வரிப்பணத்தில்தான் நாம் சம்பளம் வாங்குகின்றோம் என்ற உண்மையைப் புரிந்து அவர்களுக்கு முழு உரிமையை தர வேண்டும்” என்று பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க