பெண்கள் தொழில் தொடங்கலாம்! - வழிகாட்டுகிறார், நேச்சுரல்ஸ் சி.கே.குமாரவேல் | Chennai Conclave C.K.Kumaravel speech!

வெளியிடப்பட்ட நேரம்: 12:05 (29/11/2018)

கடைசி தொடர்பு:12:05 (29/11/2018)

பெண்கள் தொழில் தொடங்கலாம்! - வழிகாட்டுகிறார், நேச்சுரல்ஸ் சி.கே.குமாரவேல்

தொழில்முனைவுத்திறன் என்பது எம்.பி.ஏ படிப்பிலோ, பண மதிப்பிலோ கிடையாது. மாற்றி யோசிப்பதே தொழில்முனைவுத்திறன். அனைவரும் பிரச்னையாகப் பார்த்ததை எங்களது தந்தை தொழில்வாய்ப்பாகப் பார்த்தார். அதனால்தான் அவரால் வெற்றிபெற முடிந்தது.

சென்னையில் டிசம்பர் 8, 15,16 தேதிகளில் நாணயம் விகடன் சார்பாக ஃபைனான்ஸ் & பிசினஸ் கான்க்ளேவ் நடைபெறுகிறது. கான்க்ளேவ் 8-ம் தேதி நிகழ்வில், நேச்சுரல் சலூன் & ஸ்பா நிறுவனத்தின் சி.இ.ஓ., சி.கே.குமாரவேல், `பணி உருவாக்கம் - தொழில்முனைவோர்களின் தர்மம்' (Job Creation  - A Dharma of Entrepreneurs) என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்.

குமாரவேல்

கடலூரைச் சேர்ந்த குமாரவேலின் தந்தை சின்னிகிருஷ்ணன், சாஷே பாக்கெட்டுகளில் அடைத்த ஷாம்பு விற்பனையைத் தொடங்கி, இந்திய சில்லறை விற்பனைத் துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியவர். அப்படி முதன்முதலில் கொண்டுவந்ததுதான் வெல்வெட் ஷாம்பு சாஷே. தன் தந்தையின் தொழில்திறன் குறித்து ``ஒருமுறை சிங்கப்பூருக்குச் செல்லும்போது ஷாம்பு பாட்டில் எடுத்துப்போனார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த ஷாம்பு பாட்டில் உடைந்து அவரது சட்டையெல்லாம் பாழாகிவிட்டது. அந்தச் சிக்கலைக்கூட ஒரு தொழில்வாய்ப்பாக எடுத்துக்கொண்டு, `இந்த ஷாம்பு பாட்டில் பலருக்கும் பிரச்னையாக இருக்கிறது. இதை சாஷேயில் அடைத்து விற்பனைக்குக் கொண்டுவந்தால் இப்படியான சிக்கல்கள் இருக்காது' என யோசித்தார். அப்படிக் கொண்டுவந்ததுதான் வெல்வெட் ஷாம்பு சாஷே. தொழில்முனைவுத்திறன் என்பது எம்.பி.ஏ படிப்பிலோ, பண மதிப்பிலோ கிடையாது. மாற்றி யோசிப்பதே தொழில்முனைவுத்திறன். அனைவரும் பிரச்னையாகப் பார்த்ததை எங்களது தந்தை தொழில்வாய்ப்பாகப் பார்த்தார். அதனால்தான் அவரால் வெற்றிபெற முடிந்தது." என்று சி.கே.குமாரவேல் குறிப்பிடுகிறார்.
கடந்த 2000-ம் ஆண்டில் இவரும், இவரின் மனைவியும் இணைந்து நேச்சுரல் சலூன் & ஸ்பா நிறுவனத்தைத் தொடங்கினார்கள். அந்த நிறுவனத்தின் தொடக்கம் மற்றும் வெற்றி ரகசியம் குறித்துக் கூறும்போது, ``நமது ஊர் சலூன் கடைகளில் இருக்கும் பிரச்னைகளைப் பற்றி யோசித்தோம். பியூட்டி பார்லர் என்பது மேல்தட்டு மக்களுக்கானதாக இருக்கும். இன்னொருபுறம், அனைத்து மக்களுக்குமான சலூன் கடைகளின் உள்கட்டமைப்பு அத்தனை சிறப்பாக இருப்பதில்லை. அப்போது எங்கள் சிந்தனையில் உதித்ததுதான் அனைவருக்கும் ஏதுவான தரமான பியூட்டி பார்லர். எங்களது `நேச்சுரல்ஸ்' பியூட்டி பார்லரைத் தொடங்கியபோது எனக்கோ, எனது மனைவிக்கோ எந்த முன்அனுபவமும் கிடையாது. உண்மையான உழைப்பை உரிய காலத்தில் போடுவதற்கு முன், அதில் உள்ள பிரச்னைகளை தொழில்ரீதியிலான வாய்ப்பாக மாற்றிக்கொள்வது எப்படி என்பதை யோசிக்க வேண்டும். இதுதான் எங்களது வெற்றி ரகசியம்." என்கிறார்.
மேலும், ``எந்தத் தொழிலையும் சிஸ்டமேட்டிக்காகப் பண்ணுவதே தொடர்ச்சியான வெற்றிக்கு உதவும். ரகசியம் காப்பதுபோல் செய்தால் நம்முடைய வெற்றியை விரிவுபடுத்த முடியாது. இந்தக் கருத்தை தாரக மந்திரமாகக் கொண்டே நேச்சுரல் ஃப்ரான்சைஸி நிறுவனங்களை தொடர்ச்சியாக உருவாக்கி வருகிறோம். உங்கள் வீடுகளில் இருக்கும் பெண்கள் அனைவரையும் தொழில்முனைவோராகவோ, பணிக்குச் செல்பவர்களாகவோ மாற்றி, அவர்களையும் வருமானம் ஈட்டுபவர்களாக, சுயச்சார்பு உடையவர்களாக மாற்றுங்கள்." என்றும் கூறுகிறார் குமாரவேல். கான்க்ளேவ் நிகழ்ச்சியில் இவரது சிறப்புரை, தொழில்முனைவோர்கள் மத்தியில், பணி உருவாக்கம் குறித்தும் தொழில்முனைவோர்களின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதிலும் தெளிவானதொரு பார்வையை உருவாக்குவதாக அமையும். 

குமாரவேல்

சென்னையில் `நாணயம் விகடன்’ சார்பில் நடைபெறும் `பிசினஸ் அண்ட்  ஃபைனான்ஸ் கான்க்ளேவ்’ கலந்துகொள்ள...
For Registration Click Here  https://www.vikatan.com/special/tickets/nanayam-conclave/#innerlink