வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (29/11/2018)

கடைசி தொடர்பு:13:15 (29/11/2018)

மீண்டும் முழுக் கொள்ளளவை எட்டி வரும் வீராணம்!

ஜூலை மாதம் காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் கனமழை காரணமாக கர்நாடகாவில் காவிரி ஆற்றில் உபரி நீர் திறந்துவிடப்பட்டது. இதையடுத்து கொள்ளிடம் ஆற்றில் அணைக்கரையில் உள்ள கீழணையில் இருந்து வடவாறு வழியாக வந்த தண்ணீரால் வீராணம் ஏரி முழுக் கொள்ளவை எட்டியது.

தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய ஏரிகளில் வீராணம் ஏரியும் ஒன்று. கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுக்கா விவசாயிகளின் உயிர் நாடியாக இந்த ஏரி உள்ளது. மேலும், சென்னை மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது. இந்த ஏரி மூலம் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுகாவில் சுமார் 45,000 ஏக்கர் நிலம் பாசனம் வசதி பெறுகிறது.

வீராணம் ஏரி.

கடும் வறட்சி காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் வீராணம் ஏரி வறண்டது. கடந்த ஜூலை மாதம் காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் கனமழை காரணமாக கர்நாடகாவில் காவிரி ஆற்றில் உபரி நீர் திறந்துவிடப்பட்டது. இதையடுத்து, கொள்ளிடம் ஆற்றில் அணைக்கரையில் உள்ள கீழணையிலிருந்து வடவாறு வழியாக வந்த தண்ணீரால் வீராணம் ஏரி முழுக் கொள்ளளவை எட்டியது. வீராணம் ஏரியின் முழுக் கொள்ளளவு 47.50 அடியாகும். ஏரியின் பாதுகாப்பு மற்றும் மழைக்காலத்தைக் கருத்தில் கொண்டு 46 அடி வரைதான் தண்ணீர் தேக்கிவைப்பது வழக்கம்.

இந்த நிலையில், கொள்ளிடத்தில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு 1,350 கன அடி தண்ணீர் அனுப்பிவைக்கப்படுகிறது. இதனால் கடந்த சில நாள்களாக 45 அடிக்குக் கீழ் இருந்த வீராணம் ஏரியின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. தற்பொழுது வீராணம் ஏரியின் நீர் மட்டம் 46.70 அடியாக உள்ளது. சென்னை குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 72 கன அடி தண்ணீர் அனுப்பிவைக்கப்படுகிறது.