வெளியிடப்பட்ட நேரம்: 12:15 (29/11/2018)

கடைசி தொடர்பு:12:15 (29/11/2018)

`ஊருக்குள் நுழையக் கூடாதுன்னு மிரட்டுறாங்க!’ - காடுவெட்டி குருவின் மகள் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம்

நேற்று திருமணம் நடந்த காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை பாதுகாப்புக்கோரி கும்பகோணம் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார். 

காடுவெட்டி குரு மகள்

பா.ம.க-வின் மிக முக்கிய நிர்வாகியாகவும் வன்னியர் சங்கத் தலைவராகவும் இருந்தவர் காடு வெட்டி குரு கடந்த மே மாதம் நுரையீரல் பிரச்னையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து சிகிச்சை பலனளிக்காமல் மே 25-ம் தேதி உயிரிழந்தார். குரு உயிருடன் இருக்கும் வரை காடு வெட்டியில் இவரை அசைத்துப் பார்க்க முடியாது என்ற பெருமையோடு இருந்தார். ஆனால், இறந்த பிறகு இவரது குடும்பம் மற்றும் உறவினர்களுக்கிடையே கடும் சர்ச்சை நிலவி வருகிறது. நாளுக்குநாள் இவர்களுக்குள்ளான மோதல் அதிகரித்து வருகிறது. 

முன்னதாக சொத்துக்காக தன்னைப் பிள்ளைகளிடமிருந்து பிரிக்கப் பார்க்கிறார்கள். பிள்ளைகளோடு தன்னைச் சேர்த்துவையுங்கள் என குருவின் மனைவி லதா எழுதிய கடிதம்தான் சர்ச்சையின் தொடக்கமாக இருந்தது. இதைத் தொடர்ந்து குருவின் மகன் கனலரசன் தன் தாயை அவர்களின் உறவினர்களிடமிருந்து மீட்டு தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனப் பரபரப்பான வீடியோ ஒன்றை வெளியிட்டார். குருவின் குடும்பத்துக்குள் சலசலப்பு நிலவி வரும் சூழ்நிலையில் சில தினங்களுக்கு முன்பு குருவின் அம்மா கல்யாணியம்மாள் பா.ம.க மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் வைத்தியைக் கடுமையாகத் திட்டித் தீர்த்த வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலானது. 

இந்நிலையில் நேற்று காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிக்கைக்கும் குருவின் மூன்றாவது தங்கை சந்திரலேகாவின் மகன் மனோஜுக்கும் கும்பகோணத்தில் உள்ள ஒரு கோயிலில் எளிய முறையில் திருமணம் நடந்தது. தற்போது குருவின் குடும்பத்தில் நடந்துவரும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இந்தத் திருமணம் நடந்ததாகக் கூறப்பட்டது. கும்பகோணம் கர்ணகொல்லைத் தெருவில் வசித்து வரும் காடுவெட்டி குருவின் மற்றொரு தங்கையான செல்வியின் வீட்டில் காடுவெட்டி குருவின் அக்கா மீனாட்சி இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார். மகளின் திருமணத்தில் குருவின் மனைவி லதா பங்கேற்கவில்லை.

இதனையடுத்து காடுவெட்டி செல்வதற்காகப் புறப்பட்டபோது, விருத்தாம்பிகையும் மனோஜ்கிரணும் காதலித்து திருமணம் செய்து கொண்டதற்காக இவர்களை ஊருக்குள் விட மறுப்பு தெரிவிப்பதாக தகவல் வந்துள்ளது. இதனால் தம்பதி மற்றும் குருவின் அக்கா மீனாட்சி ஆகியோர் உயிருக்குப் பாதுகாப்பு கேட்டு கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர். 

இது குறித்து குருவின் அக்கா மீனாட்சி கூறுகையில், ``குரு உயிருடன் இருக்கும் போதே மனோஜும் விருதாம்பிகையும் காதலித்து வந்தனர். அவர் இருக்கும் போதே இருவருக்கும் திருமணம் நடப்பதாக இருந்தது ஆனால் அதற்குள் குரு இறந்துவிட்டார். யாரைக் கேட்டு திருமணம் செய்து வைத்தீர்கள் எனக் காடுவெட்டியிலுள்ள சிலர் எங்களை மிரட்டுகிறார்கள். ஊருக்குள் நுழையக் கூடாது என்றும் வந்தால் விரட்டியடிப்போம் எனவும் கூறுகிறார்கள். காடுவெட்டியில் உள்ள எங்கள் வீட்டில் வேலை செய்தவர்களை விரட்டிவிட்டு வீட்டை அபகரித்துள்ளனர். மேலும் எங்களிடமிருந்த நகைகள், சொத்துகளையும் ஏற்கெனவே பறித்துக் கொண்டனர். 

காடுவெட்டி குரு பா.ம.கவில் இருந்தபோது பலருக்கு ஏராளமான உதவிகளைச் செய்தார். ஆனால் அவர் இறந்த பிறகு கட்சியிலிருந்தோ, வன்னியர் சங்கத்திலிருந்தோ எந்த வித உதவியும், பாதுகாப்பும் கிடைக்கவில்லை. எனவே எங்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் பாதுகாப்பு கேட்டு கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளோம்” எனப் பேசினார்.