"குழந்தைகள் நல அமைப்பு கடமைகளைச் சரியாகச் செய்வதில்லை!" - கள ஆய்வில் தகவல் | The reason for Child abuse... Explains top panel report

வெளியிடப்பட்ட நேரம்: 16:02 (29/11/2018)

கடைசி தொடர்பு:16:02 (29/11/2018)

"குழந்தைகள் நல அமைப்பு கடமைகளைச் சரியாகச் செய்வதில்லை!" - கள ஆய்வில் தகவல்

மிழகத்தில் தொடந்துவரும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கவும், அதற்கான காரணத்தை அறியவும் மக்கள் கண்காணிப்பகம் தலைமையில் ஓர் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு நேரடிக் கள ஆய்வு மேற்கொண்டுள்ளது. விரைவில் ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யவும் இருக்கிறார்கள். இதில் ஆத்தூர் சிறுமி படுகொலை, தர்மபுரி சிறுமி மரணம் பற்றிய ஆய்வு அறிக்கைகள் வெளியிட இருப்பதால் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

குழந்தைகள் ஆய்வு

இதுபற்றி மக்கள் கண்காணிப்பகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன், ``தமிழகத்தில் தொடர்ந்து குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இதனால் குழந்தைகளுக்குப் பாலியல் வல்லுறவால் ஏற்படும் மரணங்கள் பிற பாதிப்புகளைப் பார்க்கும்போது கவலையும், அதிர்ச்சியும் ஏற்படுகிறது. இந்தக் கொடூரத்தைத் தடுப்பதற்காகவும், அதற்கான காரணத்தைக் கண்டறிவதற்காகவும், குழந்தைகள் நல ஆர்வலர்கள், துறை வல்லுநர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், மனித உரிமை காப்பாளர்கள், வழக்கறிஞர்கள் கொண்ட ஓர் உயர்மட்ட குழுவை உருவாக்கினோம்.

கணேசன்இந்த உயர்மட்டக் குழுவில் தேசியக் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் முன்னாள் தலைவர் சாந்தா சின்கா, யுனிசெஃப் முன்னாள் குழந்தைகள் பாதுகாப்பு நிபுணர் வித்யாசாகர், யுனிசெஃப் முன்னாள் குழந்தைகள் கல்வி நிபுணர் அருணா ரத்னம், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் வாலன்டினா, தடயவியல் மருத்துவ நிபுணர் சேவியர் செல்வ சுரேஷ், மூத்த வழக்கறிஞர் மார்டின், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அஜீதா, குழந்தை உரிமைச் செயற்பாட்டாளர் அலோசியஸ், குழந்தை உரிமைச் செயற்பாட்டாளர் தேவநேயன், கல்வியாளர் அசிபா, இந்தியக் குழந்தைகள் நலச்சங்கத்தைச் சேர்ந்த டைடஸ் டேனியல் ஆகியோர் இக்குழுவில் அடங்கி இருக்கிறார்கள்.

இவர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து கடந்த 25, 26 ஆகிய தேதிகளில் தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் ஆய்வுகள் மேற்கொண்டார்கள். விரைவில் ஆய்வு அறிக்கையும் தாக்கல் செய்ய இருக்கிறார்கள்'' என்றார்.

இதுபற்றி மனித உரிமைக்கான குடியுரிமை இயக்கத்தின் சேலம் மாவட்டச் செயலாளர் ராமு, ``சேலம் மாவட்டம் ஆத்தூரில் பக்கத்து வீட்டுக்காரரால் படுகொலை செய்யப்பட்ட சிறுமி, ஓமலூரில் சித்தப்பாவால் சீரழித்துக் கொல்லப்பட்ட சிறுமி, ஜலகண்டபுரத்தில் ஃபேன்ஸி ஸ்டோர் உரிமையாளரால் பாலியல் சீண்டலுக்கு ஆளான சிறுமி, ஆத்தூர் ரங்கநாயக்கன்பாளையத்தில் அண்ணனால் பாலியல் கொடுமைக்கு உள்ளான சிறுமி, தர்மபுரியில் கடத்திப் பாலியல் வன்முறைக்கு ஆளான சிறுமி ஆகியோரின் வீடுகள், பள்ளிக்கூடங்கள், அவர்களின் நண்பர்கள், சம்பவ இடங்கள், குழந்தைகள் நல அலுவலர், காவல் நிலையங்கள் என அவர்கள் சம்பந்தப்பட்ட பல இடங்களுக்குச் சென்று முழுமையான கள ஆய்வு மேற்கொண்டோம்.

ராமுஇந்தக் கள ஆய்வில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குழந்தைகளைப் பாதுகாப்பதற்காகவே உருவாக்கப்பட்ட குழந்தைகள் நலக் குழுமம், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு, இளம் சிறார் நீதிக் குழுமம், சைல்டு லைன் மைய நிறுவனம், சைல்டு லைன் இணை நிறுவனம், குழந்தைகள் காப்பகங்கள், இல்லங்கள், கூர்நோக்கு இல்லம், குழந்தை தத்தெடுப்பு மையம், வரவேற்பு இல்லங்கள், பிற்காப்பு இல்லங்கள், அரசு மருத்துவமனைகள், குழந்தை நலக் காவல் அலுவலர்கள், மகிளா நீதிமன்றங்கள், மாவட்டச் சட்டப் பணிகள் ஆணைக்குழு உள்ளிட்ட அரசு நிறுவனங்கள் அல்லது அரசிடமிருந்து நிதி பெற்றுச் செயல்படும் தன்னார்வ அமைப்புகள் கடமைகளைச் சரியாகச் செய்யாததன் விளைவே குழந்தைகள் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

குழந்தைகளின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட இந்தக் குழந்தைகள் நல அமைப்புகளே குழந்தைகளின் வன்கொடுமைக்குக் காரணம் என்பது முதற்கட்ட கள ஆய்வில் தெரியவந்திருக்கிறது. இறுதியான கள ஆய்வு அறிக்கை இன்னும் ஓரிரு வாரத்தில் இறுதி செய்யப்பட்டு அவை தமிழக முதலமைச்சர், முதன்மைச் செயலாளர், காவல் துறை இயக்குநர், மாநில மனித உரிமை ஆணையம், மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், தேசிய மனித உரிமை ஆணையம், தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், சென்னை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட இளம் சிறார் நீதிக் குழு, மாநிலச் சட்டப்பணிகள் ஆணைக்குழு, சமூகநலத் துறையின் முதன்மைச் செயலர் ஆகியோருக்கு நேரில் சமர்ப்பிக்க இருக்கிறோம்'' என்றார்.


டிரெண்டிங் @ விகடன்