வெளியிடப்பட்ட நேரம்: 13:16 (29/11/2018)

கடைசி தொடர்பு:13:16 (29/11/2018)

`13-வது கொஸ்டின் இல்ல சார்' - தேர்வறையில் அண்ணா பல்கலை மாணவர்கள் அதிர்ச்சி 

அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய தேர்வில் 13வது நம்பர் கேள்வி மாயமாகியிருந்ததால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகம் தொடர்ந்து கவனக்குறைவாகவே செயல்படுவதாக பேராசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  

சென்னை அண்ணா பல்கலைக்கழக சர்ச்சை தொடர்கதையாக உள்ளது. குறிப்பாக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் நடக்கும் கவனக்குறைவு, முறைகேடுகளால் அண்ணா பல்கலைக்கழகத்தின் மீதான மதிப்பும் மரியாதையும் குறைந்துவருவதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர். சமீபத்தில் நடத்தப்பட்ட தேர்வில் கடந்த ஆண்டு வினாத்தாளிலிருந்து பல கேள்விகள் கேட்கப்பட்டன. இதனால் அந்தத் தேர்வை அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகம் ரத்து செய்து மறுதேர்வு நடத்த உத்தரவிட்டது.  கடந்த 20-ம் தேதி நடந்த தேர்வில் 13வது நம்பர் கேள்வி மாயமாகியதாக மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. 

அதாவது, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் துறையில் படிக்கும் மாணவர்களுக்கு 5வது செமஸ்டர் தேர்வு 20.11.2018-ல் நடந்தது. இந்தத் தேர்வை மெயின் கேம்ஸ் மற்றும் எம்.ஐ.டி கேம்ஸ் ஆகிய இடங்களில் படிக்கும் இன்ஜினீயரிங் மாணவர்கள் எழுதினர். தேர்வுக்கான கால அவகாசம் மூன்று மணி நேரம். வினாத்தாளைப் பெற்ற மாணவர்கள், தேர்வு எழுதத் தொடங்கினர். வினாத்தாளை முழுமையாக படித்த மாணவர்கள், அதிர்ச்சியடைந்தனர். ஏனெனில் பகுதி பிரிவில் 12வது நம்பர் கேள்விக்குப்பிறகு 14வது  கேள்வி கேட்கப்பட்டிருந்தது. 13வது நம்பர் கேள்வி கேட்கப்படவில்லை. பகுதி பிரிவில் ஒரு கேள்விக்கு தலா 13 மதிப்பெண்கள். இதுகுறித்து மாணவர்கள், தேர்வை கண்காணித்த பேராசிரியர்களுக்குத் தகவல் கொடுத்தனர். அதன்பிறகு தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் கேள்வித்தாளை ஆய்வு செய்தபோது 13வது நம்பர் கேள்வி இல்லை என்பது தெரியவந்தது. உடனடியாக 13வது நம்பர் கேள்வி கேட்கப்பட்டு அதை துண்டுத்தாளில் பிரின்ட் செய்து மாணவர்களுக்கு கொடுத்தனர். அதன்பிறகு மாணவர்கள் 13வது நம்பருக்கான கேள்வியை எழுதியுள்ளனர். இதனால் அனைத்து கேள்விகளுக்கும் சரியாக பதிலளிக்க முடியவில்லை. குறிப்பாக 13வது நம்பர் கேள்விக்கு முழுமையாக பதில் எழுத முடியவில்லை. எனவே, கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். 

அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய தேர்வுத்தாள்

13வது நம்பர் கேள்வி மாயமானது எப்படி என்று அண்ணா பல்கலைக்கழகத்தில் விசாரித்தபோது சம்பந்தப்பட்டவர்களின் கவனக்குறைவே காரணம் என்று தெரியவந்தது. இதுகுறித்து பேராசிரியர்கள் கூறுகையில், தேர்வுத் தாளை தயாரித்த பேராசிரியர்கள் அதை தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு அனுப்பி வைப்பார்கள். அதை ஒருங்கிணைப்புக் குழுவில் உள்ள பேராசிரியர்கள் பாடத்திட்டத்திலிருந்துதான் அனைத்து கேள்விகளும் கேட்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்காணிப்பார்கள். அதன்பிறகுதான் கேள்வித்தாள் பிரின்ட் செய்யப்படும். கேள்வித்தாளை சரியாக ஆய்வு செய்திருந்தால் பிரின்ட் செய்யப்படுவதற்குமுன்பே தவறை கண்டுபிடித்திருக்கலாம். ஆனால், அதை சம்பந்தப்பட்டவர்கள் செய்யவில்லை. தேர்வு எழுதும்போது மாணவர்கள்தான் தவறை கண்டுபிடித்து கூறியபிறகு அதைச் அவசர அவசரமாக சரிசெய்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது பல்கலைக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதோடு மீண்டும் இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் தடுக்க வேண்டும்'' என்றனர். 

இதுகுறித்து தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் உயர்பதவியில் இருக்கும் அதிகாரி ஒருவர் கூறுகையில், ``கேள்வித்தாள் தயாரிக்கப்பட்டதும் அதை ஆய்வு செய்தோம். இந்தக் கேள்வித்தாளை பேராசிரியை உமாமகேஸ்வரி என்பவர்தான் தயார் செய்துள்ளார். அப்போது 13வது நம்பர் கேள்வி இருந்தது. வேல்டு ஃபைலிருந்து பிடிஎஃப்பாக அதை மாற்றும்போதுதான் தவறு நடந்துள்ளது. அதைக் கவனிக்காமல் பிரின்ட் செய்ய அனுப்பிவிட்டார்கள். கேள்வித்தாளைப் பாதுகாப்பாக வைத்து மாணவர்களுக்கு தேர்வறையில் விநியோகம் செய்யும்போதுதான் தவறு கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக மாற்று ஏற்பாடு செய்துவிட்டோம். தேர்வில் அனைத்துக் கேள்விகளுக்கும் மாணவர்களால் பதிலளிக்க முடியவில்லை என்று தெரியவந்தால் கருணை மதிப்பெண்கள் வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்படும். அதேசமயத்தில் தவறு செய்தவர்களிடம் விளக்கம் கேட்கப்படும்" என்றார். 

அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கடேசன், கூடுதல் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஸ்ரீனிவாசலு ஆகியோரிடம் விளக்கம் கேட்க பலமுறை தொடர்புகொண்டோம். ஆனால் அவர்கள் பதிலளிக்கவில்லை. அவர்களின் விளக்கத்தையும் பரிசீலனைக்குப்பிறகு வெளியிடத் தயாராக இருக்கிறோம்.

ஒருவருக்கு ஒருபதவி 

தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக இருக்கும் வெங்கடேசன் கூடுதல் பொறுப்பாக பணியாளர்கள் நியமன இயக்குநர் பதவியை கவனித்துவருகிறார். அதுபோல கூடுதல் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக இருக்கும் ஸ்ரீனிவாசலு, ஐ.ஓ.எம்-மின் இயக்குநராகவும் உள்ளார். இவர்களைப் போல ஒரே நபருக்கு இரண்டு அல்லது மூன்று பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளன. பணிச்சுமை காரணமாகத்தான் தவறுகள் நடப்பதாக அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூறுகின்றனர். எனவே, துணைவேந்தர் சூரப்பா, தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து ஒருவருக்கு ஒருபதவி வழங்கினால் வருங்காலங்களில் தவறு நடக்காது என்று சொல்கின்றனர் பேராசிரியர்கள்.