`2.0 ரிசல்ட்; 25 தொகுதிகள்; மோடி பிரசாரம்!'  - ரஜினிக்கு பி.ஜே.பி-யின் தூது  | Bjp leaders expect rajini support on parliament election

வெளியிடப்பட்ட நேரம்: 14:03 (29/11/2018)

கடைசி தொடர்பு:16:55 (29/11/2018)

`2.0 ரிசல்ட்; 25 தொகுதிகள்; மோடி பிரசாரம்!'  - ரஜினிக்கு பி.ஜே.பி-யின் தூது 

`மத்திய ஆளும்கட்சி, மாநில ஆளும்கட்சிக்கு ஆகியவற்றுக்கு இடையில் உள்ள அதிருப்தியால் நாங்கள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதனால்தான் தமிழ்நாட்டில் இன்னும் கூட்டணியை உறுதிப்படுத்தவில்லை. ரஜினி வருகையைத்தான் பிரதானமாக எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்' எனப் பேசியிருக்கிறார் பா.ஜ.க மூத்த தலைவர் ஒருவர்.

`2.0 ரிசல்ட்; 25 தொகுதிகள்; மோடி பிரசாரம்!'  - ரஜினிக்கு பி.ஜே.பி-யின் தூது 

ஜினிகாந்த் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் 2.0 திரைப்படம் குறித்து வெளியாகும் தகவல்களால் உற்சாகத்தில் இருக்கிறது படக்குழு. `படம் பற்றி பாசிட்டிவ் செய்திகள் வெளிவரும் நேரத்தில், நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுடன் ரஜினியை அணி சேர்க்கும் முயற்சியைத் துவக்குவோம்!’ எனத் தூது முயற்சிகளைத் தொடங்கியிருக்கிறார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.     

இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கிறது ரஜினியின் 2.0 படம். இந்தப் படம் குறித்து சமூக வலைதளங்களில் பாசிட்டிவ் ரிசல்ட் வெளியாகி வருகிறது. இதைப் பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரஜினியின் மகள் சவுந்தர்யா, `2.0 படம், இந்த உலகத்துக்கு வெளியே இருக்கிறது' என உற்சாகத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். வடஇந்தியாவில் 2.0 படத்தின் வெற்றியைக் கேள்விப்பட்ட பா.ஜ.க முக்கிய பிரமுகர்களும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேநேரம், `நாடாளுமன்றத் தேர்தலுக்கான அணியை உருவாக்குவதற்கும் இது சரியான நேரம்' என அவர்கள் கணிக்கின்றனர். 

பா.ஜ.கவின் முன்னணி நிர்வாகி ஒருவரிடம் பேசினேன். ``2.0 படம் குறித்து நல்லபடியாக ரிசல்ட் வருவதில் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறார் ரஜினி. வடஇந்தியாவிலிருந்து வரும் படம் தொடர்பான முடிவுகளும் அதையொட்டி பேசுகிறவர்களிடம் உற்சாகத்தைப் பகிர்ந்து வருகிறார் ரஜினி. இந்த மகிழ்ச்சி மனநிலையில் ரஜினியிடம் எங்கள் மனநிலையை வெளிப்படுத்தவிருக்கிறோம். தமிழ்நாட்டில் நல்ல அணி ஒன்றைக் கட்டமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் மோடி. இதற்கான பணிகள் அனைத்தும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்ட காலத்திலேயே இதுதொடர்பான பேச்சுக்களை அவர் தொடங்கியிருந்தார். மருத்துவமனைக்கே நேரடியாக வந்து ஸ்டாலினைச் சந்தித்தார் நிதின். தி.மு.க தரப்புக்குப் பலவித ஆஃபர்களையும் அள்ளிவீசியது மத்திய அரசு. ஆனாலும், காங்கிரஸ் கட்சியுடன்தான் கூட்டணி என்பதில் உறுதியாக இருந்துவிட்டார் ஸ்டாலின். ரஜினியிடமிருந்து உறுதியான பதில் வராததால் தவித்துக் கொண்டிருந்தனர் தேசியத் தலைவர்கள். வரும் டிசம்பருக்குள் கட்சி தொடர்பான அறிவிப்புகளை வெளியிட இருக்கிறார் ரஜினி. அதேவேகத்தில், பா.ஜ.கவோடு ரஜினி கூட்டணி சேருவதையும் உறுதிப்படுத்த நினைக்கின்றனர்" என்றார்.  

ரஜினி

இதுதொடர்பாக, ரஜினி தரப்பிடம் தெரிவிக்க சில விஷயங்களை முன்வைக்கிறாராம் பா.ஜ.கவின் மூத்த தலைவர் ஒருவர். `இந்தியா முழுக்க ரஜினிக்குச் செல்வாக்கு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், `மோடி பலசாலி' எனப் பேசியதால் பா.ஜ.க தொண்டர்களும் அவர் மீது அபிமானத்தில் இருக்கின்றனர். நாடாளுமன்றத் தேர்தலின்போது, ரஜினி பா.ஜ.கவோடு இணைந்து தேர்தலைச் சந்திக்க வேண்டும். அப்படிப் போட்டியிட்டால், தமிழ்நாட்டில் மிகப் பெரிய வெற்றி கிடைக்கும். பா.ஜ.க., அ.தி.மு.கவுடன் கூட்டணி முயற்சிகளைத் தொடங்கிவிட்டதாகப் பேசும் தகவல் தவறானது. அந்தக் கட்சியோடு கூட்டணி சேருவதை கடைசி ஆப்ஷனாகத்தான் வைத்திருக்கிறோம். காரணம், மத்திய ஆளும்கட்சி, மாநில ஆளும்கட்சிக்கு ஆகியவற்றுக்கு இடையில் உள்ள அதிருப்தியால் நாங்கள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதனால்தான் தமிழ்நாட்டில் இன்னும் கூட்டணியை உறுதிப்படுத்தவில்லை. ரஜினி வருகையைத்தான் பிரதானமாக எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். எவ்வளவோ முயற்சி செய்தும் தி.மு.க-வை எங்கள் பக்கம் கொண்டு வர முடியவில்லை. 

ஸ்டாலின், ராகுல் காந்தியோடு ஐக்கியமாகிவிட்டார். தற்போது நடந்து வரும் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் நாங்கள்தான் வெற்றி பெறுவோம். குறிப்பாக, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உறுதியாக வெற்றி பெறுவோம். அம்பேத்கர் பற்றியும் ஜோதிபாய் பூலே பற்றியும் மோடி தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். தேர்தல் நெருங்கும்போது தமிழ்நாட்டின் ட்ரெண்டுக்கு மோடி சரியாகப் பொருந்தி வருவார். ரஜினி சரியெனச் சொல்லிவிட்டால் போதும். தமிழ்நாட்டைப் பற்றி பா.ஜ.க. கவலைப்படத் தேவையில்லை. எங்களுக்குக் கிடைத்த அறிக்கையின்படி, ரஜினியும் பா.ஜ.கவும் கூட்டணி சேர்ந்தால் 25 இடங்களில் வெற்றி பெற முடியும். அடுத்தபடியாக, மோடியை ரஜினி புரமோட் செய்வதால் இந்தியா முழுக்க பா.ஜ.கவுக்குக் கூடுதல் மதிப்பு கிடைக்கும்!' -இப்படியெல்லாம் பலவித கோணங்களை ரஜினி தரப்பிடம் கூறி வருகிறார்களாம். இந்தப் பார்வையிலேயே, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும் ரஜினியிடம் பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால், `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதைவிட சட்டமன்றத் தேர்தலுக்கு வந்தால் போதும்' என ரஜினியிடம் பேசியிருக்கிறார் சத்ருகன் சின்கா.

அதே சமயம், தேசியத் தலைவர்களின் அழைப்பு முயற்சிகளுக்கு, ரஜினியிடமிருந்து உறுதியாக எந்தப் பதிலும் வரவில்லையாம்!