`யாருடன் இவ்வளவு நேரம் பேசுகிறாய்?' - தட்டிக்கேட்ட கணவனை பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திய மனைவி | wife killed her husband in villupuram

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (29/11/2018)

கடைசி தொடர்பு:15:00 (29/11/2018)

`யாருடன் இவ்வளவு நேரம் பேசுகிறாய்?' - தட்டிக்கேட்ட கணவனை பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திய மனைவி

``யாருடன் இவ்வளவு நேரம் பேசுகிறாய்” என்று கேட்ட கணவனை மனைவி பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
 

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியம் பக்கிரிப்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன், வயது 46. இவருக்கும் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை சேர்ந்த சபீனா பானு (34) என்பவருக்கும் கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தற்போது வரை இந்தத் தம்பதிக்கு குழந்தை இல்லை. வேலைக்காக ஜாகிர் உசேன் வெளிநாடு சென்றிருந்த நிலையில் விக்கிரவாண்டியில் உள்ள தன் சகோதரியின் மகளை அழைத்து வந்து வளர்த்தார் சபீனா பானு. தனியாக இருந்த சபீனா பானு எதிர்வீட்டில் இருந்த வாகன ஓட்டுநர் யுவராஜிடம் (29) சிறுசிறு உதவிகளுக்காக பேசிப் பழக ஆரம்பித்தார். ஒருகட்டத்தில் அந்தப் பழக்கம் இருவருக்குமிடையே காதலாக உருவெடுத்தது. அதன்பின் இரவு, பகல் என அடிக்கடி சபீனா பானுவின் வீட்டில் இருவரும் தனிமையில் சந்திக்கத் தொடங்கினர். இவர்களின் சந்திப்பு ஊர் மக்களுக்கு தெரியத் தொடங்கியது.

மனைவி

கடந்த ஆண்டு வெளிநாட்டிலிருந்து திரும்பிய ஜாகீரிடம் சபீனா-யுவராஜ் இருவரின் தனிமை சந்திப்பைப் பற்றி ஊர் மக்கள் கூற ஆரம்பித்தனர். ஆனால், மனைவி மீதிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையால் அதைப் பொருட்படுத்தாமல் சென்றார் அவர். ஒரு கட்டத்தில் இருவரும் தனிமையில் சந்திப்பது, நீண்ட நேரம் போனில் பேசிக்கொண்டிருப்பது  போன்ற செய்கைகளால் ஜாகீருக்கு சந்தேகம் ஏற்பட, ``இவ்வளவு நேரம் யாருடன் போனில் பேசிக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்கத் தொடங்கினார். சபீனா அதை பொருட்படுத்தாமல் எப்போதும்போல தனது காதலைத் தொடர்ந்துகொண்டிருந்தார். அதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு நீடித்து வந்திருக்கிறது. அந்தச் சூழலில்தான் நேற்று முன் தினம் மறுபடியும் சபீனாவும் யுவராஜும் தனிமையில் சந்தித்தகாகக் கூறப்படுகிறது.

கைது

அதைப்பற்றி ஜாகீர், சபீனாவிடம் கேட்க இருவருக்குமிடையே தகராறு முற்றியுள்ளது. அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் வீட்டில் கேனில் இருந்த பெட்ரோலை எடுத்து ஜாகீர் மீது ஊற்றிய சபீனா அவருக்கு தீ வைத்துக் கொலை செய்ய முயன்றார். அதனால் உடல் எரிந்து கொண்டிருக்கும் நிலையில் அலறிக்கொண்டே வீட்டுக்கு வெளியே வந்து விழுந்தார் ஜாகீர். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் தீயை அணைத்து அவரை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றும் வரும் ஜாகீர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த கண்டமங்கலம் காவல்துறை சபீனா மற்றும் அவரது காதலன் யுவராஜ் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முறை தவறி ஏற்படும் காதல் முடிவில் விபரீதத்தையே ஏற்படுத்தும் என்பதற்கு இந்தச் சம்பவமும் ஓர் உதாரணம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க