ஆறு மாதத்தில் எட்டு கார் கடத்தல் சம்பவங்கள் - அலறும் பெரம்பலூர்... அசட்டை போலீஸ்!

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் நடக்கும் தொடர் கார் கடத்தல்கள் சம்பவங்களால் வாகனங்களை வைத்திருப்போர் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு நிற்கிறார்கள்.

திண்டுக்கல்லை சேர்ந்தவர் செந்தில்குமார். டிராவல்ஸ் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் செந்தில்குமாரின் செல்போனுக்கு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசியவர்கள் குறிப்பிட்ட ஓட்டலின் பெயரைச் சொல்லி. 'நாங்கள் அந்த ஓட்டல் அருகே இருக்கிறோம். சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு சாமிகும்பிட போக வேண்டும்" என்று கூறி சொகுசு காரை வாடகைக்கு கேட்டுள்ளனர். 4 ஆயிரத்து 800 ரூபாய் வாடகை கொடுக்கவும் ஒப்புக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செந்தில்குமார், தனது கார் டிரைவர் வரதராஜூவிற்கு (49) தகவல் கொடுத்து அந்த ஓட்டலுக்கு 3 பேரையும் பிக்கப் செய்ய அனுப்பி வைத்திருக்கிறார்.
அவர்களை பிக்கப் செய்து கொண்டு நேற்று அதிகாலை 3.30 மணியளவில் கார் சமயபுரம் வந்தது. அப்போது, காரில் வந்தவர்களில் ஒருவர் பெரம்பலூர் அருகே கிராமத்தில் எனது சித்தப்பாவை பார்த்துவிட்டு கோயிலுக்கு போகலாம்'' என்று கூறி காரை பெரம்பலூருக்கு திருப்பச் சொல்லி இருக்கிறார். டிரைவரும் அப்படியே காரை திருப்பி இருக்கிறார்.

திருச்சி - சென்னை பைபாஸ் சாலையில் உள்ள எளம்பலூர் திருமங்கலி அம்மன் கோவில் அருகே கார் வந்து கொண்டிருந்தபோது இன்னொரு நபர், டிரைவர் வரதாஜின் முகத்தில் ஏதோ ஒரு திரவத்தை பூசி இருக்கிறார். சற்று நேரத்தில் டிரைவர் மயங்கிச் சாய்ந்ததால் அவரை கீழே தள்ளிவிட்டு 3 பேரும் காரை கடத்திக் கொண்டு பறந்திருக்கிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக டிரைவர் வரதராஜ் கொடுத்த புகாரின் பேரில், பெரம்பலூர் டவுன் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள், இன்று அதிகாலையில் பெரம்பலூர் -  சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கார் விற்பனை ஷோரூமில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 கார்களை மர்ம நபர்கள் கடத்தி விட்டார்கள். நேற்று இரவு வழக்கம் போல் இரவு காவலாளி தங்கவேல் பாதுகாப்பு பணியில் இருந்தார். இன்று அதிகாலை அங்கு வந்த மர்ம நபர்கள் மூன்று பேர் தங்கவேலுவை கத்தியை காட்டி மிரட்டியதோடு  அவரை நாற்காலியில் கட்டி போட்டுவிட்டு, அவரிடமிருந்த சாவியை எடுத்து ஷோரூமில் நிறுத்தப்பட்டிருந்த 2 புதிய கார்களை வெளியில் எடுத்தனர். மேலும், அங்கிருந்த 1 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மற்றும் 2 கம்ப்யூட்டர்கள், எல்.சி.டி டி.வி. உள்ளிட்ட பொருட்களையும் காரில் சுருட்டிக் கொண்டு சொந்த வீட்டைக் காலி செய்து அக்கம் பக்கத்தில் சொல்லிவிட்டுச் செல்வது போல் சென்றிருக்கிறார்கள்.

ஷோரூம் உரிமையாளர் மாறனின் புகாரின் பேரில் போலீசார் அனைத்து காவல் நிலையங்களுக்கும், டோல் கேட்களுக்கும் தகவல் கொடுத்தனர். இந்நிலையில், கார்களில் போதிய எரிபொருள் இல்லாததால் பாதி வழியிலேயே பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் பார்க்கிங்கில் கார்களை நிறுத்திவிட்டு பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு மர்ம கும்பல் ஜூட் விட்டிருக்கிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஆறு மாதத்தில் நடந்திருக்கும் எட்டாவது கார் கடத்தல் சம்பவம் இது. ஆனாலும் அசட்டையாகவே இருக்கிறது போலீஸ்!

- சி. ஆனந்தகுமார்
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!