ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து தொழிற்சாலைகள் தண்ணீர் எடுக்கத் தடை! - பசுமைத் தீர்ப்பாயம் | NGT bans factories to take water from srivaikundam dam

வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (29/11/2018)

கடைசி தொடர்பு:14:20 (29/11/2018)

ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து தொழிற்சாலைகள் தண்ணீர் எடுக்கத் தடை! - பசுமைத் தீர்ப்பாயம்

ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து 20 எம்.ஜி.டி., திட்டத்தில் ஸ்டெர்லைட் உள்ளிட்ட எந்தத் தொழிற்சாலைக்கும் தண்ணீர் எடுக்கக் கூடாது எனத் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இறுதித் தீர்ப்பு வழங்கியுள்ளது ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்கலாம் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நியமித்த ஆய்வுக் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில், தீர்ப்பாயம் அளித்துள்ள இத்தீர்ப்பால் மக்கள்,  விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஸ்ரீவைகுண்டம் அணை

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றுப்பாசனத்தின் மூலமாக 46,107 ஏக்கரில் நெல், வாழை, வெற்றிலை போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இப்பாசனத்தில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு வரை ``கார், முன்கார், பிசானம்'' என முப்போக நெற்பயிர் சாகுபடி நடைபெற்று வந்தது. இந்நிலையில், தாமிரபரணி ஆற்றின் ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து விவசாயம் மற்றும் பொதுமக்களின் குடிநீருக்கான தண்ணீரை தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலை, அனல்மின் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளுக்கும் 20 எம்.ஜி.டி.திட்டத்தில் தினமும் 9 கோடியே 20 லட்சம் லிட்டர் (20 மில்லியன் காலன்) தண்ணீர் வழங்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது.

இத்திட்டம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு தாமிரபரணி பாசனக் கால்வாய்களில் விவசாயத்துக்குத் தேவையான தண்ணீர் கிடைப்பதே அரிதாகி, முப்போக நெற்பயிர் சாகுபடி ஒருபோக சாகுபடியாக குறைந்துவிட்டது. பொதுமக்களும் குடிப்பதற்கு குடிதண்ணீர் கிடைக்காமல் பரிதவித்து வரும் நிலையும் ஏற்பட்டது. இதன் காரணமாக மாவட்டத்திலுள்ள விவசாய நிலங்களுக்குள் கடல்நீர் உட்புகுந்து நிலத்தடி நீரானது உவர்ப்பாக மாறி விவசாயமும் நலிவடைந்தது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியானது.

ஜோயல்தாமிரபரணி பாசன விவசாயிகள் மற்றும் பொதுமக்களை பாதுகாத்திடும் நோக்கத்தில் ``ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து தொழிற்சாலைகளுக்கு 20 எம்.ஜி.டி திட்டத்தில் தண்ணீர் வழங்குவதற்கு நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும்'' எனப் பசுமைத் தீர்ப்பாயத்தில் தி.மு.க சார்பில் மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் தூத்துக்குடி ஜோயல் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கின் அடிப்படையில் பசுமைத் தீர்ப்பாயம் ``ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து, சட்ட விதிமுறைகளுக்குப் புறம்பாக ஸ்டெர்லைட் உள்ளிட்ட எந்தத் தொழிற்சாலைகளுக்கும் தண்ணீர் எடுக்கக் கூடாது'' எனக் கடந்த வருடம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது. இச்சூழலில், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வடிகால் வாரியத்தினர் அந்தத் தடை உத்தரவினை நீக்கி, அணையிலிருந்து தண்ணீரை எடுத்து தொழிற்சாலைகளுக்கு வழங்கி வந்தனர். இந்நிலையில் இவ்வழக்கு சென்னையிலிருந்து டெல்லி, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்துக்கு மாற்றப்பட்டு வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது.

இவ்வழக்கின் இறுதி விசாரணை இன்று (28.11.2018-ம் தேதி)  நீதியரசர்கள் எஸ்.பி.வாங்கட்டி,  கே.ராமகிருஷ்ணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் டாக்டர்.நாகின் நந்தா அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஜோயல் சார்பில் மூத்த வழக்கறிஞர் ரித்விக் தத்தா ஆஜராகி வாதாடினார். விசாரணையின் முடிவில், ``ஸ்ரீவைகுண்டம் அணைப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி. வனத்துறைக்குட்பட்ட பகுதியிலிருந்து தொழிற்சாலைகளுக்குத் தண்ணீர் எடுக்க வேண்டுமெனில் அதற்கான அனுமதியை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் முறையாகப் பெறவேண்டும். ஆனால், இதில் விதிமுறைகள் சரியான முறையில் பின்பற்றப்படவில்லை.

தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வடிகால் வாரியத்தினர் இதில் திட்டமிட்டே ``குடிநீர் தேவை'' என்ற பொய்யான காரணத்தைச் சொல்லி தொழிற்சாலைகளுக்குத் தண்ணீர் வழங்கி வந்துள்ளனர். எனவே ``முழுக்க முழுக்க மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி அணையிலிருந்து ஸ்டெர்லைட் தொழிற்சாலை உட்பட எந்தத் தொழிற்சாலைக்கும் தண்ணீர் எடுக்க அனுமதிக்கக் கூடாது என்றும் அணையிலிருந்து எடுக்கப்படும் தண்ணீரை பொதுமக்களின் குடிநீர் தேவைக்கு மட்டுமே வழங்கவேண்டும்'' என்றும் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மாவட்டத்தில் முப்போக நெற்பயிர் சாகுபடி விவசாயத்தை முடக்கி வந்ததுடன், பொதுமக்களின் தேவைக்கான குடிநீர் தட்டுப்பாட்டுக்கும் முக்கிய காரணமாக இருந்துவரும் 20 எம்.ஜி.டி திட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திடும் வகையில் தொடரப்பட்ட இவ்வழக்கு, மக்களின் தொடர் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியாக ''ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து 20எம்.ஜி.டி., திட்டத்தில் ஸ்டெர்லைட் உள்ளிட்ட எந்தத் தொழிற்சாலைக்கும் தண்ணீர் எடுக்கக் கூடாது என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இறுதித் தீர்ப்பு வழங்கியுள்ளது'' ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்கலாம் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நியமித்த ஆய்வுக்குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த நேரத்தில் ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து ஸ்டெர்லைட் உள்ளிட்ட எந்தத் தொழிற்சாலைக்கும் தண்ணீர் எடுக்கக் கூடாது என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அளித்துள்ள தீர்ப்பால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க