வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (29/11/2018)

கடைசி தொடர்பு:15:20 (29/11/2018)

டெல்லியில் திரளும் விவசாயிகள்! - ரயில் நிலையத்திலேயே போராட்டத்தைத் தொடங்கிய தமிழகக் குழு

டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் கலந்துகொள்ள சென்ற தமிழக விவசாயிகள், டெல்லி ரயில் நிலையத்தில்  மறியல் செய்தும் பின்னர் அரை நிர்வாணத்துடன் ஊர்வலம் சென்றது டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் மாபெரும் போராட்டத்தை அகில இந்திய கிஷான் சங்கம் ஒருங்கிணைக்கிறது. இன்றும் நாளையும் நடக்கும் இப்போராட்டத்தில் நாட்டின் அனைத்து மாநிலங்களிலிருந்து 207 சங்கங்களைச் சேர்ந்த 30 லட்சம் விவசாயிகள் திரண்டு வந்து டெல்லியை அதிர வைக்கின்றனர். 

டெல்லியில் விவசாயிகள்

விவசாயப் விளைபொருள்களுக்கு நியாயமான விலை வேண்டும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும், நாட்டிலுள்ள அனைத்து நதிகளையும் இணைத்து விவசாயிகளுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும், புயல் சேதத்தால் அழிந்த அனைத்து பயிர்களுக்கும் உரிய நஷ்டஈடு விரைந்து வழங்க வேண்டும், 60 வயதடைந்த விவசாயிகளுக்கு மகன், மகள் இருந்தாலும், பட்டா நிலம் இருந்தாலும் மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும், கிடைக்காமல் உள்ள பயிர்க் காப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு விரைந்து பெற்றுத்தர வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் ஒன்றிணைத்து டெல்லியில் போராட்டம் நடத்துகின்றனர். இதற்கு ஆதரவு தெரிவித்து பா.ஜ.க. தவிர மற்ற கட்சித் தலைவர்கள் போராட்டத்தில் கலந்துகொள்வார்கள் என்று சொல்லப்படுகிறது. 

தமிழகத்திலிருந்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் டெல்லி சென்றுள்ளனர். இன்று காலை டெல்லி ரயில் நிலையத்தில் வந்திறங்கிய தமிழக விவசாயிகள் அங்கேயே ரயில் மறியல் செய்தனர். பின்னர், போலீஸாரால் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, ரயில்வே ஸ்டேஷன் முதல் ராம்லீலா மைதானம் வரை அரைநிர்வாணமாக மண்டைஓடு, எலும்புகளுடன் ஊர்வலமாகச் சென்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க