`ஒரே மாதத்தில் 37 பேருக்குப் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு!’ - திருப்பூரில் நிலவும் சுகாதாரமற்ற சூழல் | Swine flu outrage in tirupur

வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (29/11/2018)

கடைசி தொடர்பு:15:40 (29/11/2018)

`ஒரே மாதத்தில் 37 பேருக்குப் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு!’ - திருப்பூரில் நிலவும் சுகாதாரமற்ற சூழல்

திருப்பூர் மாவட்டத்தில் நவம்பர் மாதத்தில் மட்டும் 37 பேருக்குப் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இதுதொடர்பாக திருப்பூர் மாவட்டச் சுகாதாரத்துறையினர் பேசியபோது, ``நவம்பர் மாதத்தில் மட்டும் திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் 20 நபர்களுக்கும், மாவட்டத்தின் பிற பகுதிகளில் 17 நபர்களுக்கும் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இதில் பலர் திருப்பூர் மற்றும் கோவை அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். அதில் பிரபல திரையரங்க உரிமையாளர் பாலு என்பவர் மட்டும் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்துபோனார். நவம்பர் மாதத்தில் மட்டும் 20 ஆயிரம் டாமிஃபுளூ மாத்திரைகள் பன்றிக்காய்ச்சலுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதேபோல டெங்கு காய்ச்சலாலும் இந்த மாதத்தில் மட்டும் திருப்பூரில் 10 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்' என்றனர்.

பின்னர் இதுகுறித்து திருப்பூர் மாநகர் நல அலுவலர் பூபதியிடம் விளக்கம் கேட்டபோது, ``திருப்பூர் மாநகரப் பகுதிகளில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல்களை கட்டுப்படுத்த போதிய மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறோம். பன்றிக்காய்ச்சல் மூன்று நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மூன்று நிலைகளுக்கும் முறையான சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.

திருப்பூர் மாவட்டம் முழுவதும் சமீபகாலமாக டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல்களால் மக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டு வருகிறார்கள். திருப்பூர் மாநகராட்சிப் பகுதியில் மட்டும் மொத்தம் 60 வார்டுகள் இருக்கின்றன. மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் குப்பைகள் முறையாக அகற்றப்படுவது இல்லை. இதனால் கடுமையான துர்நாற்றம் அடிப்பதுடன், குடியிருப்புப் பகுதிகளில் கடுமையான சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் தூய்மைப் பணிகளை உடனடியாக தீவிரப்படுத்த வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் பலரும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.