`பெண்கள் சுயதொழில் செய்ய முன்வரணும்!’ - முயல் வளர்ப்பில் அசத்தும் முதுகலைப் பட்டதாரிப் பெண் | Women shining in Rabbit farm business

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (29/11/2018)

கடைசி தொடர்பு:16:20 (29/11/2018)

`பெண்கள் சுயதொழில் செய்ய முன்வரணும்!’ - முயல் வளர்ப்பில் அசத்தும் முதுகலைப் பட்டதாரிப் பெண்

முயல் வளர்ப்பில் முன்னேறிவருகிறார் முதுகலைப் பட்டதாரி சத்தியா. இவரது முயல் பண்ணையை விரிவுபடுத்த அரசு கடனுதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

முயல்

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியைச் சேர்ந்தவர் சத்தியா. எம்.ஏ.பி.ஏட் முடித்தும் அரசு வேலையை மட்டும் நம்பாமல், முயல் வளர்ப்பில் சுயதொழில் செய்து பலரது பாராட்டுகளைப் பெற்றுவருகிறார். சத்தியாவை அவரது முயல் பண்ணையில் நேரில் சந்தித்துப் பேசுகையில், ”நான் திருமணமாகி சில மாதங்களிலேயே கணவரைப் பிரிந்து வாழ்ந்துவருகிறேன். வாழ்க்கையில் பல கஷ்டங்களுக்குப் பின் என்னுடைய மகனை காப்பாற்ற, கிடைத்த வேலைகளைச் செய்துவந்தேன்.

போதிய வருமானம் இல்லாத சமயத்தில், என்னுடைய குழந்தைக்கு இதய அறுவைசிகிச்சை செய்தோம். குணமடையவும், மகனை அம்மாவிடம் விட்டுவிட்டு சுகாதாரத்துறையில் டெங்கு விழிப்புஉணர்வு களப்பணியாளராகச் சேர்ந்து வேலைசெய்துவருகிறேன். சகோதரரின் உதவியுடன் தற்போது, கொட்டாம்பட்டியில் சொந்தமாக சிறிய அளவில் முயல் பண்ணை ஒன்றை அமைத்து, சுயதொழில் செய்துவருகிறேன். எனது முயல் பண்ணையில் நாட்டுக்கோழி , கின்னிகோழி, கினி எலி, நாய் உள்ளிட்டவற்றை வைத்துள்ளேன். வளர்ந்த முயல் மாதம், ஒரு முறை 5 முதல் 9 குட்டிகள் வரை ஈனுகிறது. குட்டி ஈன்ற 15 நாள்களிலேயே அவற்றை வேறு கூண்டில் வைத்துப் பராமரிக்கிறேன். முயல் குட்டி ஜோடி 600 முதல் 800 வரையும், வளர்ந்த முயல்கள் கிலோ ரூ.600-க்கும் வழங்குகிறேன்.

காலையில்  கோதுமை, தவிடு, கம்பு, சோளம் ஆகியவற்றை அரைத்துக் கொடுக்கிறேன். மற்ற நேரங்களில் புல், கேரட் ,காலிஃபிளவர் , முட்டைகோஸ் இலைகளையும் வழங்குறேன். குழாய்வழியாக கூண்டுக்கு தண்ணீர் செல்வதுபோல  அமைத்துள்ளேன். முயல்களை சுகாதாரமாக  வைத்துள்ளேன். போதுமான வருமானம் கிடைக்கிறது. அரசு  கடன் உதவி வழங்கினால், என்னுடை பண்ணையை விரிவுபடுத்தி தொழிலில் முன்னேற்றம் அடைவேன். என்னைப்போன்ற பெண்கள் என்ன கஷ்டங்களை அனுபவித்தாலும், அதை சுலபமாக எதிர்கொள்ள வேண்டும். அரசு வேலையை மட்டும் நம்பாமல், சுயதொழில் செய்ய வேண்டும்'' என்றார்.