வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (29/11/2018)

கடைசி தொடர்பு:17:00 (29/11/2018)

`சொத்துக்காக மகளின் சம்மதமின்றி திருமணம் செய்துவைத்துவிட்டார்கள்!’ - `காடுவெட்டி’ குருவின் மனைவி ஆவேசம்

`எங்களுடைய சொத்துக்காக என் மகளைத் திட்டமிட்டுத் திருமணம் செய்துகொண்டுள்ளனர். என் கணவர் அவர்களை சும்மா விடமாட்டார்’ எனக் காடுவெட்டி குருவின் மனைவி லதா ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

திருமணக் கோலத்தில் காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை

வன்னியர் சங்கத்தின் மாநிலத் தலைவராக இருந்த காடுவெட்டி குரு உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்ட நிலையில், அவரது சொத்து யாருக்கு சொந்தம் என்பது குறித்த பிரச்னை கடந்த சில மாதங்களாக இருந்து வந்தது. இந்நிலையில் காடுவெட்டி குருவின் மகள் விருத்தாம்பிகைக்கும் காடுவெட்டி குருவின் தங்கை சாவித்திரி மகன் மனோஜ்க்கும் திடீரென்று நேற்று திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணத்தில் காடுவெட்டி குருவின் மனைவி லதா கலந்துகொள்ளவில்லை.

காடுவெட்டி குருவின் மனைவி லதா

உடல்நிலை சரியில்லாமல் சென்னையில் தனது பெற்றோரின் வீட்டிலிருந்த காடுவெட்டி குருவின் மனைவி இன்று காடுவெட்டி கிராமத்துக்கு வந்து குருவின் சமாதியில் தன் மகளின் சம்மதமில்லாமல் திருமணம் செய்துவிட்டதாகக் கூறி அழுது புலம்பினார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``எனக்கு எதிராக என் மகன் மற்றும் மகளை என் கணவரின் தங்கை குடும்பத்தினர் திருப்பிவிட்டுள்ளனர். என் கணவரின் பெயரில் உள்ள சொத்துகளை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கில் விருப்பமில்லாமல் என் மகள் விருத்தாம்பிகைக்கும் என் கணவரின் தங்கை சாவித்திரியின் மகன் மனோஜ்க்கும் எனக்குத் தெரியாமல் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

ஆனால், முறைப்படி என் கணவரின் சொத்துகள் அனைத்தும் என் மகனுக்குச் சொந்தம். அவனின் பெயரிலேயே சொத்துகள் இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். சொத்துக்காக என் குடும்பத்தை என்னை விட்டு பிரிக்கப் பார்ப்பதாக’’ குருவின் தங்கை சாவித்திரியின் குடும்பத்தினர் மீது குற்றம்சாட்டினார். 

மேலும், உடல்நிலை சரியில்லாமல் தன் பெற்றோரின் வீட்டில் இருந்தபோது மருத்துவமனைக்கான அனைத்து செலவுகளையும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பார்த்துக்கொண்டதாகவும் அவர் கூறினார்.