`ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தீர்ப்பாயம் ஆயுதமாகச் செயல்படுகிறது!’ - ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் | Retired judge Hari paranthaman speaks about sterlite issue

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (29/11/2018)

கடைசி தொடர்பு:18:45 (29/11/2018)

`ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தீர்ப்பாயம் ஆயுதமாகச் செயல்படுகிறது!’ - ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன்

“ஆலை மூடப்பட்டது தவறானது” என்ற தருண் அகர்வாலின் ஆய்வறிக்கையே தீர்ப்பைப் போல அமைந்துவிட்டால், பசுமைத் தீர்ப்பாயம் என்ன தீர்ப்பு சொல்லும்?. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு பசுமைத் தீர்ப்பாயம் ஒரு ஆயுதம்போலவே செயல்படுகிறது” என ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அரி பரந்தாமன் குற்றம்சாட்டியுள்ளார். 

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பான ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவினரின் ஆய்வறிக்கை மீதான விசாரணை, நேற்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நடைபெற்றது. இதில், `ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது தவறு’ என அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்கள் அதிருப்தி அடைந்தனர். பல கட்சிகளும் ஆய்வறிக்கை குறித்து கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அரி பரந்தாமன், தூத்துக்குடியில் செய்தியாளார்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர், `ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின்மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை. ஆலைக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டவர்கள்மீது அவதூறு பரப்பும் வேலையை ஆலைத்தரப்பு தற்போது செய்துவருகிறது. ஓய்வுபெற்ற பேராசிரியை பாத்திமாபாபு குறித்து வெளியிடப்பட்ட சர்ச்சை வீடியோவும் இது போன்றதுதான். ஸ்டெர்லைட் ஆலை இயங்க வேண்டுமா என்பது குறித்து ஆய்வுசெய்ய ஒய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதிகள் யாரும்  நியமிக்கப்படாததே நெருடலை ஏற்படுத்தியது. தருண் அகர்வால் மீது ஊழல் குற்றச்சாட்டு இருந்த காரணத்தால், தமிழகத்தில் சிறப்பாக எவ்வித குற்றச்சாட்டும் இல்லாமல் பணியாற்றி,  ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சிவசுப்பிரமணியம், சந்துரு  ஆகியோரில் ஒருவரை நியமிக்கலாம் என ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் சார்பில் தீர்ப்பாயத்தில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனு ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

ஆய்வுக்குழுவில், தமிழகத்தில் உள்ள நீதிபதிகளை நியமிக்கக் கூடாது என்ற ஸ்டெர்லைட் ஆலைத்தரப்பின் கோரிக்கை, தீர்ப்பாயத்தில்  முன்வைக்கப்பட்ட போதுகூட, தமிழக அரசு எவ்வித ஆட்சேபமும் தெரிவிக்காதது,  பல சந்தேகத்தையும் கேள்விகளையும் எழுப்பியது.

`ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு வெளியிட்ட அரசாணை பலமற்றது. சட்டமன்றத்தில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டால்தான் இது சட்டமாகும்’  என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் அமர்வு கருத்து தெரிவித்திருந்தது. இதனையே மக்களும், பல அமைப்புகள், கட்சியினரும் வலியுறுத்தினார்கள். ஆனால், தற்போதுவரை அது நிறைவேற்றப்பட்டவில்லை. தமிழக அரசும் அதைக் கண்டு கொள்ளவில்லை.

ஆய்வுக்குழுவின் தற்போதைய அறிக்கை மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆலை மூடப்படுவதற்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், `ஆலை மூடப்பட்டது தவறானது. சில நிபந்தனைகளுடன் ஆலை இயங்க அனுமதி அளிக்கலாம்’ என ஒரு தீர்ப்பைப் போலவே உள்ளது ஆய்வறிக்கை. ஆய்வறிக்கையே தீர்ப்பைப் போல அமைந்துவிட்டால், பசுமைத் தீர்ப்பாயம் என்ன தீர்ப்பு சொல்லும்?. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு பசுமைத் தீர்ப்பாயம் ஒரு ஆயுதம்போலவே செயல்படுகிறது” என்றார்.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க