வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (29/11/2018)

கடைசி தொடர்பு:19:20 (29/11/2018)

மணவாளக்குறிச்சி மணல் ஆலையில் அத்துமீறி புகைப்படம் எடுத்து தப்பிச் சென்ற பிரான்ஸ் நாட்டினர்!

மணவாளக்குறிச்சி மணல் ஆலை மற்றும் கன்னியாகுமரி கடற்கரைப் பகுதிகளை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துவிட்டு விமானத்தில் தப்பிச் சென்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 2 பேர் மற்றும் அவர்களுக்கு உதவிய பங்குத்தந்தை ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி பகுதியில் வர்த்தகத் துறைமுகம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. புதிதாக அமையும் துறைமுகத்தின் ஒரு பகுதியில் கப்பல்படை தளம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. கூடங்குளம் அணு உலை கன்னியாகுமரிக்கு அருகில் இருப்பதால் கடற்கரைப் பகுதியில் ஹெலிகேம் பறக்கவிட்டு புகைப்படம் எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த வார தொடக்கத்தில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 2 பேர் கன்னியாகுமரி பகுதியில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளனர். அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால், ஏற்கெனவே தங்கியிருந்த ஹோட்டல் நிர்வாகம் இருவரையும் வெளியேற்றியுள்ளது. இதையடுத்து வேறு ஒரு ஹோட்டலில் ரூம் போட்ட அவர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கும் பணியைத் தொடர்ந்திருக்கின்றனர்.

இதுகுறித்து உளவுத்துறைக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. உளவுத்துறை விசாரணை நடத்தியது தெரியவந்ததும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் கோவளம் மற்றும் மணவாளக்குறிச்சி அரியவகை மணல் ஆலையின் உள்பகுதிகளில் சென்று புகைப்படம் எடுத்துவிட்டு திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் பிரான்ஸ் சென்றுவிட்டனர். இதுகுறித்து மணவாளக்குறிச்சி அரியவகை மணல் ஆலை செக்யூரிட்டி தலைமை மேலாளர் ராஜேஷ் ராமன்நாயர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆர்தர் ரொலாண்ட் ரெனே, ஜூலியஸ் டெமின் மற்றும் இவர்களுக்கு உதவியதாக மணக்குடி பங்குத்தந்தை கிளிட்டஸ் ஆகியோர் மீது மணவாளக் குறிச்சி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

வெளிநாட்டவர் வழிநெறி சட்டத்தை மீறி அத்துமீறி தடைசெய்யப்பட்ட பகுதியில் நுழைந்து வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்ததாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் மீதும். அதற்குத் தூண்டுதலாக இருந்ததாக பங்குத்தந்தை கிளிட்டஸ் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டினரை சென்னையில் இருந்து அழைத்து வந்த 2 பேரை காவல்துறையினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்வதாகக் கூறப்படுகிறது. மேலும், பிரான்ஸ் நாட்டினர் தங்கியிருந்த ஹோட்டலின் இரண்டு அறைகளை காவல்துறையினர் பூட்டிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரான்ஸ் நாட்டினர் வீடியோ, புகைப்படம் எடுத்ததன் பின்னணி குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.