``பசுமைத் தீர்ப்பாயத்தோட அறிக்கை அதிர்ச்சியா இருக்கு" தூத்துக்குடி ஸ்னோலின் அம்மா | "The only tribute they can do for those who died is to shutdown the factory!", Snowlin's mother

வெளியிடப்பட்ட நேரம்: 19:36 (29/11/2018)

கடைசி தொடர்பு:19:36 (29/11/2018)

``பசுமைத் தீர்ப்பாயத்தோட அறிக்கை அதிர்ச்சியா இருக்கு" தூத்துக்குடி ஸ்னோலின் அம்மா

``ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறு. அதை ஏற்றுக்கொள்ள முடியாது" என நீதிபதி தருண் அகர்வால் குழு பசுமைத் தீர்ப்பாயத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . 

தூத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து மே மாதம்  28-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்தது தமிழக அரசு. இதை எதிர்த்து டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்தது. இந்தக் குழு தாங்கள் ஆய்வு செய்த அறிக்கையைச் சீலிடப்பட்ட கவரில் வைத்து பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை போராளிகள்

அறிக்கை தொடர்பான விசாரணை நேற்று பசுமைத் தீர்ப்பாய நீதிபதி கோயல் தலைமையில் நடைபெற்றது. அப்போது, தருண் அகர்வால் குழு அறிக்கை தொடர்பாக விசாரணை நடந்தது. அந்த அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறு, அதை ஏற்கமுடியாது எனக் கூறப்பட்டுள்ளது. ஆலையை மூடுவதற்கு முன்பு நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்க வேண்டும் அவர்கள் தரப்பு வாதங்களைக் கூற வாய்ப்பு கொடுத்து அதன் பிறகே ஆலை மூடப்பட்டிருக்க வேண்டும். ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு கூறிய காரணங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை, ஆலையை மூடியது நீதிக்கு எதிரானது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரிக்காமல் இருக்க சில பரிந்துரைகளையும் தருண் அகர்வால் குழு அந்த அறிக்கையில் சமர்ப்பித்துள்ளது; ஆலையைத் திறக்க வேண்டும் எனப் பசுமைத் தீர்ப்பாயத்துக்குப் பரிந்துரையும் செய்துள்ளது .  

இறுதியில் இந்த அறிக்கை தொடர்பாக ஒருவார காலத்துக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் எனக் கூறி வழக்கு டிசம்பர் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் பதில் அளிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.  இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்காகப் போராட்டம் நடத்தி அந்தப் போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஸ்னோலினின் அம்மாவிடம் பேசினோம் .

ஸ்னோலின் அம்மா

``இதுக்கு மேல போராட எங்ககிட்ட தெம்பு இல்லைம்மா. என் பொண்ணைப் பறிகொடுத்துட்டு தினமும் நரகத்தை அனுபவிச்சிட்டு இருக்கேன்மா. தினமும் என் பொண்ணை நினைச்சு அழுது, அழுது உடம்புக்கு முடியாம போச்சு. என் வீட்டுக்காரரும் மகளை நினைச்சு கவலைபட்டு இரண்டு முறை ஆஸ்பத்திரியில அட்மிட் பண்ற அளவுக்கு சீரியஸா போயிட்டார். அந்த ஆலையை மூடணும்னு என் பொண்ணை உசுரையே கொடுத்துட்டுப் போயிட்டா. உசுரோட மதிப்பு இவ்வளவு தானா .. என் பொண்ணே போனதுக்கு அப்புறம் நான் மட்டும் இருந்து என்ன பண்றதுன்னு பல முறை யோசிச்சிருக்கேன். இந்த ஆலையை மறுபடி திறந்தாங்கன்னா கண்டிப்பாப் போராட போகணும்னு மனசு துடிக்குதும்மா. ஆனா, என் புள்ளைங்க தங்கச்சியைத்தான் போராட்டத்துக்கு அனுப்பி நாமளே கொன்னுட்டோம்.. நீயாச்சும் எங்களுக்கு வேணும்மா.. போகதம்மான்னு சொல்லுதுங்க. என் புள்ளையைப் பறிகொடுத்துட்டு தினமும் நான் வடிக்கிற கண்ணீரும், நான் அனுபவிக்குற வலியும் கடவுளுக்குத் தெரியும்மா. அவர் எல்லோரையும் பார்த்துட்டு தானே இருக்கார். சிலர், இதை ஒரு செய்தியா நினைச்சு ஈஸியா கடந்துட்டாங்க. வலியை அனுபவிக்குறவங்களுக்கு அது வலி. மத்தவங்களுக்கு அது செய்தி. மக்களுக்காகத் தானே அரசாங்கம்... மக்களை கொல்றதுக்காக இல்லையே! ஆலையை மூடுறதுதான் இறந்தவங்களுக்கு அவங்க செலுத்துற அஞ்சலி'' எனக் கண் கலங்கினார்.

ஸ்டெர்லைட்

ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். இது ஒன்றுதான் அனைவருடைய கோரிக்கை. பொறுத்திருந்து பார்ப்போம்..! 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்