தொடரும் மழை; நெருக்கடி தரும் வங்கிகள்! - விரக்தியில் டெல்டா விவசாயிகள் | delta farmers in trouble

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (29/11/2018)

கடைசி தொடர்பு:20:20 (29/11/2018)

தொடரும் மழை; நெருக்கடி தரும் வங்கிகள்! - விரக்தியில் டெல்டா விவசாயிகள்

`பட்ட காலிலேயே படும்' என்பதுபோல டெல்டா பகுதியில் தற்போது பெய்துவரும் மழை, அங்கு நடைபெற்றுவரும் நிவாரணப் பணிகளை முடக்கிப்போட்டுள்ளது.

டெல்டா

கஜா புயலால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த டெல்டா பகுதி மக்களின் பசித்துயர் போக்க உணவு அளிப்பது, வீட்டு மேற்கூரைகளுக்குத் தார்பாலின் உறைகளிட்டு தற்காலிகப் பாதுகாப்பு வசதிகளைச் செய்துகொடுப்பது, உணவு சமைக்கத் தேவையான மளிகைப் பொருள்கள், நாப்கின், கொசுவத்தி, கொசுவலை, உடைகள் போன்ற உதவிகளைத் தன்னார்வலர்கள் தங்களால் இயன்றவரை செய்துகொடுக்கிறார்கள். இன்னொரு பக்கம், வீழ்ந்த மரங்கள் அனைத்தையும் அறுத்து அப்புறப்படுத்துவது, சாய்ந்த சிறிய தென்னம்பிள்ளைகளுக்கு முட்டுக்கொடுத்து தூக்கி நிறுத்துவது போன்ற பணிகளில் கிராம மக்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இன்னும் பல கிராமங்களில் தொடர்ச்சியாக இரண்டாவது வாரமாக மின்சார வசதி கொடுக்கப்படவில்லை.

இந்தநிலையில் நேற்று இரவிலிருந்தே டெல்டா பகுதியில் மீண்டும் மழை தொடங்கிவிட்டது. இதன் காரணமாக, வீடிழந்த மக்களும் கூரை வீட்டை ஓரளவு மட்டும் சீரமைத்துக் குடியேறிய மக்களும் மீண்டும் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகிவருகிறார்கள். கிராமம் முழுக்க தண்ணீர்க்குட்டைக்குள் மூழ்கியிருப்பதால் தன்னார்வலர்களால் உணவு சமைப்பது, நிவாரண உதவிகள் வழங்குவது போன்றவற்றை செயல்படுத்த முடியாத சூழல். இன்று முழுவதும் விட்டுவிட்டு மழை பெய்துவருவதால் கஜா புயலால் வீழ்ந்த தென்னை மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளும் தொய்வடைந்துள்ளன. 

தென்னந்தோப்பு வருமானம் முற்றிலும் முற்றுப்பெற்றதால், வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவது எப்படி என்ற விரக்தியில், மனமுடைந்த விவசாயிகள் கடும் மன உளைச்சலில் இருக்கும் சூழலில் கடனுதவி அளித்த வங்கிகளும் இவர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருவதாகத் தெரிகிறது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி விவசாயிகளுக்கு மனதளவில் ஆறுதல் அளித்து ஆதரவாக இருக்கும்பொருட்டு, விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வது குறித்து அரசு உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது. விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்ட மக்களின் துயர்போக்குவதில் தீவிரமாகவும் மனிதாபிமானத்துடன் அரசு செயல்பட வேண்டிய தருணம் இது.