வெளியிடப்பட்ட நேரம்: 18:35 (29/11/2018)

கடைசி தொடர்பு:18:35 (29/11/2018)

தினகரனை சேர்த்துக்கொள்வதில் என்ன சிக்கல்? - பா.ம.க-வில் நடக்கும் பட்டிமன்றம்!

`கூட்டணி இல்லாமல் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது நமக்குத்தான் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். திராவிடக் கட்சிகள்தானே வேண்டாமென்று சொன்னோம், தினகரனை ஏற்றுக்கொள்வதில் என்ன சிக்கல்?’ என்று பா.ம.க நிர்வாகிகள் கட்சித் தலைமைக்கு ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

பாமக

பாட்டாளி மக்கள் கட்சியின் கடந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளைப் பொறுத்தவரை சொற்ப இடங்களை மட்டுமே அக்கட்சி வென்றுள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு, அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து 7 தொகுதிகளில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டது பா.ம.க. ஆனால், அதில் ஒரு தொகுதியில்கூட அக்கட்சியால் வெற்றிபெற முடியவில்லை. 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் இணைந்து களம்கண்ட பா.ம.க-வுக்கு, தருமபுரி தொகுதி மட்டுமே கிடைத்தது. கடந்த காலங்களில் நடந்த தவறுகளை இந்தத் தேர்தலில் தவிர்க்க வேண்டும் என்பதில் கட்சித் தலைமை உறுதியாக உள்ளது. கருணாநிதி,ஜெயலலிதா இல்லாத சூழலை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்; வாய்ப்பைத் தவறிவிடக் கூடாது என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

``கூட்டணிகுறித்து அவசரப்பட வேண்டாம். பொறுமையாகவே முடிவெடுப்போம். நம்மை யார் நாடி வருகிறார் என்பதைப் பாருங்கள்'' என ராமதாஸ் கூறியுள்ளார். ``டி.டி.வி-யுடன் இணைந்து தேர்தலை சந்திக்கலாம், அது நமக்கு நிச்சயம் பயனளிக்கும். அப்படிச்செய்தால் அ.தி.மு.க, தி.மு.க-வுக்கான வாக்குகளை எளிதாகப் பிரித்துவிடலாம். முக்குலத்தோர், வன்னியர்களுக்கான பெருவாரியான வாக்குகளை அள்ளிவிடலாம். இதைப் பயன்படுத்தி இடைத்தேர்தலிலும் வெற்றிபெற்றுவிடலாம்'' என்று ராமதாஸிடம் விளக்கயிருக்கிறார் அன்புமணி.

இதுதொடர்பாக நிர்வாகி ஒருவர், ``பெரிதும் எதிர்பார்த்த சட்டப்பேரவைத் தேர்தல் ஏமாற்றத்தைத் தந்தது. அதற்காகக் கடுமையாக உழைத்தோம். 10 எம்.எல்.ஏ-க்களுடன் சட்டமன்றத்தில் அமரலாம் என்ற எங்கள் எண்ணம் தவிடுபொடியானது. ஆனால், அப்போதே எங்கள் நிறுவனர் நாடாளுமன்றத் தேர்தலையும் இதேபோல் விட்டுவிடக் கூடாது என அறிவுறுத்தியிருந்தார். தொடக்கத்தில் கூட்டணியில்லாமலே போட்டியிடலாம் என  முடிவெடுக்கப்பட்டது. பிறகு, கூட்டணி அமைத்தால்தான் தொகுதிகளை வெல்லமுடியும் என விவாதிக்கப்பட்டது. இந்த வரிசையில் காங்கிரஸ், டி.டி.வி.தினகரன் சாய்ஸில் உள்ளனர். காங்கிரஸை வளைப்பது கஷ்டம். அதே சமயம் டி.டி.வி-யை எளிதாக நெருங்கிவிடலாம் என நிர்வாகிகள் பலர் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அடுத்த மாதம் சென்னையில் நடக்க உள்ள பொதுக்குழுக் கூட்டத்தில், பெட்டி வைத்து உறுப்பினர்களிடம் வாக்கெடுப்பு நடத்த தலைமை முடிவெடுத்துள்ளது'' என்றார்.