தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மீது 6 பிரிவுகளில் சி.பி.ஐ வழக்கு! | CBI files cases in 6 sections against police and Revenue Officers over thoothukudi gunfire incident

வெளியிடப்பட்ட நேரம்: 18:35 (29/11/2018)

கடைசி தொடர்பு:18:35 (29/11/2018)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மீது 6 பிரிவுகளில் சி.பி.ஐ வழக்கு!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் மீது 6 பிரிவுகளின் கீழ் சி.பி.ஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடவும், இந்தச் சம்பவத்துக்கு காரணமான காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஏற்கெனவே பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிப்காட் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி உத்தரவிட்டனர். இந்த உத்தரவுடன் துப்பாக்கிச்சூடு தொடர்பாகக் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது அளிக்கப்பட்டுள்ள புகார்கள் தொடர்பாகவும் சி.பி.ஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், ``நீதிமன்ற உத்தரவின்படி எங்களது புகாரின் அடிப்படையில் காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்யவில்லை. இதனால் சி.பி.ஐ இணை இயக்குநர் பிரவீன் சின்ஹா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என சி.பி.எம் கட்சி மற்றும் பல்வேறு அமைப்பைச் சேர்ந்த 7 பேர் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு குறித்து மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ``தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ விசாரணை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கு முன்பே காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி சி.பி.ஐ-க்கு கடந்த மே 29-ல் புகார் மனு அனுப்பப்பட்டது. இவ்வழக்கு விசாரணையை சி.பி.ஐ-க்கு மாற்றி மதுரைக்கிளை உத்தரவு அளித்ததும், இந்த உத்தரவை தீவிரமாக அமல்படுத்தக்கோரியும் சி.பி.ஐ-யிடம் மனு அளிக்கப்பட்டது.

சி.பி.ஐ விசாரணையை 4 மாதத்தில் முடிக்க வேண்டும் என  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவு நகல் சி.பி.ஐ-க்கு கடந்த ஆகஸ்ட் 31-ல் அளிக்கப்பட்டது. ஆனால், இந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர், அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யாமல், துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிப்காட் காவல்துறையினர் பதிவு செய்திருந்த வழக்கில் கடந்த அக்டோபர் 8-ல் மீண்டும் எப்.ஐ.ஆர் பதிவு செய்தது  சி.பி.ஐ.

காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி நாங்கள் அளித்த புகாரின் பேரில் சி.பி.ஐ வழக்கு பதிவு செய்யாதது உயர் நீதிமன்றத் தீர்ப்பை அவமதிப்பு செயலாகும். இது தொடர்பாக, சி.பி.ஐ இணை இயக்குநருக்கு கடந்த அக்டோபர் 12-ல் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினோம். அதன் பிறகும் நீதிமன்ற உத்தரவின்படி எங்களது புகாரின் பேரில் காவல்துறையினர், அதிகாரிகள் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்யவில்லை. எனவே, சி.பி.ஐ இணை இயக்குநர் பிரவீன் சின்ஹா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இம்மனுவை விசாரணை செய்த நீதிபதிகள் அமர்வு, இதுகுறித்து விளக்கம் அளிக்க சி.பி.ஐ இணை இயக்குநர் பிரவீன் சின்ஹாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். இந்நிலையில், சென்னை ராஜ்பவன் பெசன்ட் நகரில் உள்ள சிறப்பு குற்றப் பிரிவு சி.பி.ஐ அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு தொடர்பாகக் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க