வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (29/11/2018)

கடைசி தொடர்பு:20:20 (29/11/2018)

புயல் பாதித்த மாவட்டங்களில் ஜிஎஸ்டி வரி தாக்கல் காலக்கெடு நீட்டிப்பு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகப் பகுதிகளைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களுக்கும், டிட்லி புயலால் பாதிக்கப்பட்ட ஆந்திராவைச்சேர்ந்த ஸ்ரீகாகுளம் மாவட்ட தொழில் நிறுவனங்களுக்கும் ஜிஎஸ்டி வரி தாக்கல்செய்ய காலக்கெடு ஒரு மாதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வீசிய கஜா, டிட்லி புயல்களால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தொழில் நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு, ஜிஎஸ்டி வரி தாக்கல்செய்வது கூடுதல் சுமையாக உள்ளது. இவற்றைப் பரிசீலித்த நிதி அமைச்சகம், ஜிஎஸ்டி வரி தாக்கலுக்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது.

ஜி.எஸ்.டி.

இதுகுறித்து நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமீபத்தில் வீசிய டிட்லி புயலால் ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ரீகாகுளம் மாவட்ட தொழில் நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. எனவே, அவர்களது செப்டம்பர், அக்டோபர் மாத ஜிஎஸ்டி ஆர்-3பி வரி தாக்கலுக்கு நவம்பர் 30 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர், திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், நாகப்பட்டினம், தேனி, தஞ்சாவூர், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, கரூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 11 மாவட்டங்களைச் சேர்ந்த தொழில் நிறுவனங்கள், அக்டோபர் மாதத்திற்கான ஜிஎஸ்டி  ஆர்-3பி வரி தாக்கல்செய்ய காலக்கெடு டிசம்பர் 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல, வெவ்வேறு வருமான வரம்புகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கும் ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்யும் காலக்கெடுவை நீட்டிக்கப்பட்டுள்ளன." நிதி அமைச்சகத்திலிருந்து ஜிஎஸ்டி வரி தாக்கல் காலக்கெடு நீட்டிப்புக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.