கஜா புயல் பாதித்த பகுதிகளில், சிறப்பு மருத்துவ முகாம் மூலம் 6 லட்சம் பேருக்கு சிகிச்சை! | Government providing medical camps in Gaja cyclone-affected areas

வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (29/11/2018)

கடைசி தொடர்பு:20:40 (29/11/2018)

கஜா புயல் பாதித்த பகுதிகளில், சிறப்பு மருத்துவ முகாம் மூலம் 6 லட்சம் பேருக்கு சிகிச்சை!

கஜா புயல் பாதித்த பகுதிகளில், சிறப்பு மருத்துவ முகாம் மூலம் 6 லட்சம் பேருக்கு சிகிச்சை என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

`ஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், 9 ஆயிரத்து 703 சிறப்பு மருத்துவ முகாம்கள்மூலம் 6 லட்சத்து 21 ஆயிரம் பேருக்கு சிகிச்சையும், 29 லட்சத்து 86 ஆயிரம் பேருக்கு நிலவேம்புக் குடிநீரும் வழங்கப்பட்டுள்ளது' என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

மருத்துவ முகாம்

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:-

"தமிழகத்தில் ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் போன்ற கடலோர மாவட்டங்களில், முன்னெச்சரிக்கை மற்றும் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள், கடந்த 14 நாள்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 131 நடமாடும் மருத்துவ வாகனங்கள், 161 பள்ளிச்சிறார் நலத்திட்ட மருத்துவக் குழுக்கள், 134 அவசரகால ஊர்திகள், 45 உணவு பாதுகாப்புக் குழுக்கள், 600-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மற்றும் 6 கேரள மருத்துவக் குழுக்கள், பொதுமக்களுக்குத் தேவையான சிகிச்சைகளைத் தொடர்ந்து அளித்துவருகின்றனர்.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில், இதுவரை 9 ஆயிரத்து 703 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் 6 லட்சத்து 21ஆயிரத்து 693 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் மூலம் 603 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. இதன்மூலம், ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 609 பேருக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு, 3 ஆயிரத்து 691 பேர் மேல்சிகிச்சைக்காகப் பரிந்துரைசெய்யப்பட்டனர்.

கஜா பாதித்த பகுதிகளில் மருத்துவ முகாம்

இந்திய முறை மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக, பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 350 இந்திய முறை மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டன. இந்த முகாம்கள் தவிர, பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டுவருகிறது. இதுவரை 29 லட்சத்து 86 ஆயிரத்து 922 பேருக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.

நோய்களைப் பரப்பும் ஈக்கள் மற்றும் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க, 329 குளோரின் பரிசோதனைக் குழுக்கள், 324 பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் குழுக்கள் செயல்பட்டுவருகின்றன. மேலும், கிணறுகள் மற்றும் நீர்த்தேக்கத் தொட்டிகளில் 1,000 லிட்டர் தண்ணீரில் நான்கு கிராம் வீதம் பிளீச்சிங் பவுடர் கலந்து குடிநீர் விநியோகம் செய்வதை உறுதிசெய்ய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்மூலம் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

சுகாதாரம்குறித்த கூடுதல் தகவல்களை அறிந்துகொள்ளவும் மருத்துவ உதவி பெறவும், 24 மணி நேரமும் செயல்படும் 104 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம். ஒரு தெருவில் மூன்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், அருகில் உள்ள நடமாடும் மருத்துவக் குழு, அரசு மருத்துவமனை மற்றும் பொது சுகாதாரக் கட்டுப்பாட்டு மையத்துக்கு 044-24350496 / 24334811 / 9444340496 என்ற தொலைபேசி எண்களைத் தொடர்புகொண்டு, உடனே தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க