வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (29/11/2018)

கடைசி தொடர்பு:21:00 (29/11/2018)

`மழை பாதிப்புகளைச் சரிசெய்ய ரூ.31,000 கோடி வேண்டும்!’ - கேரள முதல்வர் பினராயி விஜயன்

கேரளத்தை புனர்நிர்மானம் செய்ய 31,000 கோடி வேண்டும் எனவும் மத்திய அரசு வழங்கிய உணவு தானியம் மற்றும் விமானம் பயன்படுத்தியதுக்காக 290.74 கோடி ரூபாய் நாம் வழங்க வேண்டியுள்ளது எனவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

பினராயி விஜயன்

கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ``ஒகி புயல் தாக்கி ஓராண்டு ஆகிறது. இந்த நூற்றாண்டில் நாம் கண்ட மிகப்பெரிய பேரிடர் கடந்த ஆகஸ்ட் மாதம் கண்ட மழை. அதை நாம் ஒற்றுமையாக நின்று எதிர்கொண்டோம். மழையால் தகர்ந்த கேரளத்தை மீண்டும் புனர் நிர்மாணம் செய்ய 31,000 கோடி ரூபாய் வேண்டும். முதல் அமைச்சரின் நிவாரண நிதியாக 2,683.18 கோடி ரூபாய் வந்துள்ளது. அதில் 688.48 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. வீடுகள் கட்டுவதற்காக 1,357.78 கோடி ரூபாய் செலவு செய்யப்பட உள்ளது. மழைக்காலத்தில் மத்திய அரசு வழங்கிய உணவு தானியம் மற்றும் விமானம் பயன்படுத்தியதுக்காக 290.74 கோடி ரூபாய் நாம் வழங்க வேண்டியுள்ளது. இதுவரை வந்த தொகையைக் கொண்டு பெருமழையால் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்ய முடியாது. மழையால் இடிந்த கட்டடங்களுக்கு பதில் அமைக்கப்படும் புதிய கட்டடங்கள் பேரிடர் ஏற்பட்டால் அதில் தகர்ந்துபோகாத அளவுக்கு அமைக்கப்படும்’’ என்றார்.