வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (29/11/2018)

கடைசி தொடர்பு:21:40 (29/11/2018)

`நியூட்ரினோவால் எந்தப் பாதிப்பும் இல்லை!’ - முதுகலை விஞ்ஞானி விளக்கம்

நியூட்ரினோ ஆய்வு மையத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதால், கிராம மக்கள் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துவந்தனர். ஆனால், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில், நியூட்ரினோ ஆய்வுக்கூடத்தை அமைத்துக்கொள்ளலாம்' என அனுமதி அளித்திருந்தது. நியூட்ரினோவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துவருகின்றன.

நியூட்ரினோ

இந்நிலையில் நியூட்ரினோ ஆராய்ச்சியாளர் டி.வி.வெங்கடேஷ்வரன் இன்று மதுரை வடபழஞ்சியில் உள்ள நியூட்ரினோ ஆய்வு மையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவர் கூறுகையில், ``நியூட்ரினோவின் நிறை அதிகமாக உள்ளதா, குறைவாக உள்ளதா அல்லது நடுநிலையில் உள்ளதா எனத் தெரியாது. வளிமண்டலத்தில் இருந்து நொடிக்கு பல கோடி நியூட்ரினோக்கள் விழுகிறது அது எந்தத் திசையில் எவ்வளவு வீரியத்தில் உள்ளது என்பதை அளவிட வேண்டும். அப்படி நியூட்ரினோவை அளவிட முயலும்போது கருவியின் மீது மற்ற துகள்களும் விழும் அப்போ அளவிடுவது கடினம். ஆனால், மலைகளுக்கு உள்ளே வைத்து நியூட்ரினோவை எளிமையாக அளவிடலாம். நியூட்ரினோவைத் தவிர மற்ற துகள்கள் மலைகளைக் கடந்து வர முடியாது என்பதால், தற்போது சுற்றுச்சூழல் அமைச்சகம் நியூட்ரினோ ஆராய்ச்சியைத் தொடங்க அனுமதித்துள்ளது. வனவிலங்கு வாரியத்திடம் அனுமதி கோரியுள்ளோம். அதைத் தொடர்ந்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெற வேண்டும். அதற்குப் பின் ஆய்வுகள் தொடங்கிவிடலாம். 

நியூட்ரினோவைப் பற்றி சிலர் போலியான கருத்துகளைத் தெரிவிக்கின்றனர். இதனால், தொற்றுநோய் உள்ளிட்டவை வரும் என்று சிலர் கூறிவருகிறார்கள். ஆனால், எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதே உண்மை. இந்தக் கருவியால் சுற்றுச்சூழல் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. எந்த கெமிக்கலும் பயன்படுத்தவில்லை. இது அளவிடக்கூடிய கருவி மட்டுமே. இதன்மூலம் எதையும் சேகரிக்க முடியாது. இந்தத் திட்டத்தில் பங்கு பெற விரும்பும் மாணவர்கள் தங்களுடைய கல்லூரி அனுமதியோடு வரலாம். வர விரும்புவார்கள் Kcravi@tifr.res.in மின்னஞ்சலுக்கு உங்களைப் பற்றி அனுப்பி வைக்கலாம். மாணவர்கள் நியூட்ரினோ ஆய்வில் ஆர்வத்தோடு பங்கேற்று திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்’’ என்றார்.