வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (29/11/2018)

கடைசி தொடர்பு:21:20 (29/11/2018)

`ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் சட்டரீதியாகப் போராட வேண்டும்!’ - கமல்ஹாசன்

 ''ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, தமிழக மக்கள் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக சட்டரீதியாகப் போராட வேண்டும்'' என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கமல்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளை மீண்டும் பார்க்கச் செல்கிறேன். அந்த மக்களின் தேவையை அறிய ஒரு ஆய்வுப் பயணமாக இது இருக்கும். மத்தியக் குழு பார்வையிட்டுச் சென்று சொல்லும் கருத்து அடிப்படையில், மத்திய அரசு நிவாரணம் அறிவிக்கும் என எதிர்பார்க்கிறேன்.

டெல்டா பகுதிகளில் நிவாரணம் என்பது தொடர்ந்து நடைபெற வேண்டும். அங்கு, தொற்றுநோய்கள் பரவாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டெர்லைட் விவகாரத்தில், தமிழக அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை; தமிழக மக்கள் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக சட்டரீதியாகப் போராட வேண்டும் என்றார். மேகதாது விவகாரத்தில், விவசாயிகளிடம் கருத்துக் கேட்டு எந்தவொரு திட்டத்தையும் அரசு அறிவிக்க வேண்டும். காவிரியை நம்பி உள்ள விவசாயிகளைக் காப்பாற்றும் வகையில் ஆற்றை ஓடவிடாமல் ஓரிடத்தில் தேக்கிவைக்கக் கூடாது'' என்று கமல் தெரிவித்தார்.