வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (29/11/2018)

கடைசி தொடர்பு:22:03 (29/11/2018)

`தூத்துக்குடியில் உள்ள பொதுமக்கள் நலனில் எங்களுக்கு மிகுந்த அக்கறையுள்ளது' - ஸ்டெர்லைட் சி.இ.ஓ!

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்கலாம் என தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தருண் அகர்வால் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஸ்டெர்லைட் ஆலையின் தலைமைச் செயல் அதிகாரி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

ஸ்டெர்லைட்


ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடியவர்கள் மீது அரசு வன்முறையைக் கட்டவிழ்த்தது. இதில் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதன் நீட்சியாகத் தேசிய பசுமை தீர்ப்பாயம் சார்பில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவானது, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்கலாம் என அறிக்கை அளித்துள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக ஸ்டெர்லைட் ஆலையின் தலைமை செயல் அதிகாரி ராம்நாத் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ``எங்கள் நிறுவன செயல்பாடுகளில் ஒவ்வோர் அம்சத்திலும் நாங்கள் சுற்றுச்சூழல் வரைமுறைக்கு உட்பட்டு செயல்பட்டு வருகிறோம். மேலும், சட்டத்தால் வரையறுக்கப்பட்ட அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றுகிறோம்.

ஸ்டெர்லைட் ஆலை

தேசிய பசுமைத் தீர்ப்பாய குழு தேவையான கால அவகாசத்தை எடுத்துக்கொண்டு சுதந்திரமான விசாரணை நடத்தி இருதரப்பினரின் வாதங்களையும் கேட்டது. பின்னர், அந்தக் குழு தனது அறிக்கையை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடம் வழங்கியது. அந்தக் குழு வழங்கிய அறிக்கையிலிருந்து முக்கியமான பகுதி ஒன்று நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டது. அதில், ஆலையை மூடுவதற்கு தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு இயற்கை நீதிக்கொள்கைகளுக்கு எதிரானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் எழுதப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் அல்லது எழுதப்படாத மற்ற கூடுதல் விஷயங்கள் போன்றவை தொழிற்சாலையை நிரந்தரமாக மூடுவதை நியாயப்படுத்தக்கூடிய ஒன்றாக இருக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

சிஇஓ

 

மேலும் அந்தக் குழு சில பரிந்துரைகளை நிறுவனத்துக்கும் தமிழ்நாடு மாசுக் கட்டுபாட்டு வாரியத்துக்கும் முன்வைத்துள்ளது. அந்த அறிக்கையை இன்னும் நாங்கள் பெறவில்லை. அதைப் பெற்றுக்கொண்ட பிறகு, அது குறித்து விரிவாகப் படித்து நடவடிக்கையை மேற்கொள்வோம். அந்த அறிக்கைக்கு பதில் அளிக்க இரு தரப்பினருக்கும் சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. பதிலளிக்க 1 வாரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணை டிசம்பர் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நிறுவனம் என்ற முறையில் நாங்கள் எங்கள் ஊழியர்கள், எங்கள் ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் தூத்துக்குடியில் வசிக்கும் பொதுமக்கள் ஆகியோர் நலனில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டுவருகிறோம். இந்த ஆலை மூடப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ள 25,000 குடும்பங்கள் இயல்புநிலைக்குத் திரும்ப ஒரு நல்ல தீர்ப்பு வழங்கப்படும் என நம்புகின்றோம். எங்களுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வருபவர்களுக்கும், தூத்துக்குடி மக்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்'' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.