தூத்துக்குடியிலிருந்து சீனாவுக்கு கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்ட 450 கிலோ கடல் அட்டை பறிமுதல்! | 450 kg sea cucumbers are seized in thoothukudi

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (29/11/2018)

கடைசி தொடர்பு:22:30 (29/11/2018)

தூத்துக்குடியிலிருந்து சீனாவுக்கு கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்ட 450 கிலோ கடல் அட்டை பறிமுதல்!

தூத்துக்குடியிலிருந்து இலங்கை வழியாக சீனாவுக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடைசெய்யப்பட்ட 450 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தூத்துக்குடி

வங்காள விரிகுடா கடலில் உள்ள மன்னார் வளைகுடா பகுதி, பாதுகாக்கப்படும் உயிர் கோளப்பகுதியாகும். உலகில் உள்ள பவளப்பாறைகளில், 17 சதவிகிதமான பவளப்பாறைகள் மன்னார் வளைகுடா பகுதியில் இருப்பதால் பல்வேறு  அரிய வகையான  கடல் வாழ் உயிரினங்கள் இங்கு காணப்படுகின்றன. இந்திய கடல்வளத்தைப் பாதுகாக்கும் வகையில், இந்தப் பகுதி பாதுகாக்கப்பட்ட  கடல் பூங்காவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு கடல் பசு, கடல் அட்டைகளைப்  பிடிப்பதும், கடத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது. இலங்கையும் மன்னார் வளைகுடா பகுதியில் இருந்தாலும் இங்கு கடல் வளங்களைப் பாதுகாக்கவும் கடல்வாழ் உயிரினங்களைப் பிடிக்கவும் ஏற்றுமதி செய்யவும் தடை இல்லை. இதனால் சட்டவிரோதமாகப் பவளப்பாறை, சங்கு, கடல் அட்டைகள் போன்ற கடல்வாழ் உயிரினங்கள் துாத்துக்குடி, ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்குக் கடத்தப்பட்டு அங்கிருந்து சீனா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு மருத்துவத் தேவைக்காகக் கடத்தப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

கடல் அட்டைகள்

இந்நிலையில் துாத்துக்குடி கடல்வழிப் பகுதியாகக் கடல் அட்டைகள் கடத்துவதாக மரைன் போலீஸார் மற்றும் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தூத்துக்குடி முத்தரையர் காலனி பகுதியில் மரைன் போலீஸார் ரோந்துப் பணியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் ஒரு படகில் இருந்து ஆம்னி வேனில் சாக்குமூட்டைகளை சிலர் ஏற்றிக்கொண்டிருந்தனர்.

அப்போது ஆம்னி வேனை சோதனை செய்தபோது அதில், 4 சாக்கு மூட்டைகளில் தடைசெய்யப்பட்ட 240 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் இருப்பது தெரிய வந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த மரைன் போலீஸார், ஆம்னி வேனை ஓட்டி வந்த, மகேந்திரன் என்பவரை  கைது செய்தனர். விசாரணையில் தூத்துக்குடியிலிருந்து இலங்கை வழியாக சீனாவுக்கு கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதற்கிடையில், தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய போலீஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், முத்தம்மாள் காலனி. ஆதிபராசக்தி நகரிலுள்ள ஒரு வீட்டில் சோதனை செய்தனர்.

அங்கு சாக்கு மூட்டைகளில் தடை செய்யப்பட்ட அரிய வகை பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அங்கிருந்த 210 கிலோ எடையிலான  கடல் அட்டைகளைப் பறிமுதல் செய்தனர். இவற்றை மன்னார் வளைகுடா வன உயிரின பாதுகாப்புப் பிரிவு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தூத்துக்குடியில் ஒரே நாளில் இரண்டு இடங்களில் 450 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க