வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (29/11/2018)

கடைசி தொடர்பு:23:00 (29/11/2018)

கோயில் குளங்கள் ஆக்கிரமிப்பு வழக்கு - இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் கட்டுபாட்டில் உள்ள திருமுக்குளம் உள்ளிட்ட 4 குளங்களையும் சீரமைத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில்,  இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

ஆண்டாள் கோயில்

சென்னை திருத்தொண்டர் சபையின் நிறுவனராக இருப்பவர் ராதாகிருஷ்ணன். இவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல்செய்தார் அதில்,"ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயில் மிகவும் பிரசித்திபெற்றது. இக்கோயிலில் உள்ள திருமுக்குளத்தில் தெப்பத் திருவிழா சிறப்பாக நடைபெறும். ஆனால், பராமரிப்பு இல்லாமல் உள்ளது. நீராழி மண்டபத்தில் உள்ள பழைமையான கல் மண்டபங்கள் சிதைந்துள்ளன.

மேலும், திருப்பாற்கடல் குளத்தின் நடுப்பகுதியில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டும்,  நீர் ஆதாரங்களையும்,  நீர் வழிப்பாதைகளைப் பாதுகாக்கும் வகையிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கட்டுப்பாட்டில் உள்ள திருமுக்குளம் உள்ளிட்ட 4 குளங்களையும் சீரமைத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மனுவில் கோரியிருந்தார். இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க  உத்தரவிட்டு, வழக்கை 11.12.18-க்கு ஒத்திவைத்தனர்.