பாரம்பர்ய உணவுத் திருவிழா - அசத்திய திருப்பூர் அரசுப் பள்ளி மாணவர்கள் | Food festival at tirupur government school

வெளியிடப்பட்ட நேரம்: 01:30 (30/11/2018)

கடைசி தொடர்பு:06:45 (30/11/2018)

பாரம்பர்ய உணவுத் திருவிழா - அசத்திய திருப்பூர் அரசுப் பள்ளி மாணவர்கள்

திருப்பூர் அருகே மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற பாரம்பர்ய உணவுத் திருவிழா பொதுமக்களிடையே பெரும் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.

அரசுப் பள்ளி

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்திருக்கிறது அரண்மனைப்புதூர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி. இங்கு 200-க்கும் அதிகமான மாணவ - மாணவிகள் கல்வி பயில்கின்றனர். இந்த நிலையில், இன்றைய தினம் இப்பள்ளியில் பாரம்பர்ய `உணவு திருவிழா' நடத்த ஏற்பாடு செய்திருந்தனர் பள்ளி நிர்வாகத்தினர்.

அதனடிப்படையில் 100-க்கும் அதிகமான உணவு வகைகளை இப்பள்ளி மாணவர்கள் தங்களின் வீட்டிலிருந்து தயாரித்து எடுத்து வந்திருந்தனர். கம்பு, கேழ்வரகு, சோளம், தினை உள்ளிட்டவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பாரம்பர்ய உணவு வகைகளை, பள்ளி வளாகத்தில் கண்காட்சியாக வைக்கப்பட்டு பின்னர் சக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் பகிர்ந்தளித்து உண்டு மகிழ்ந்தனர்.

இன்றைய பள்ளி மாணவர்களின் உணவுப் பட்டியலில் துரித உணவுகளும், ஜங்க் புட் என்று அழைக்கப்படும் கொழுப்பு நிறைந்த உணவுகளும்தான் அதிகளவில் நிறைந்து கிடக்கிறது. தெருவில் விற்கப்படும் பண்டங்களாக இருந்தாலும், உயர்தர உணவகங்களில் விற்கப்படும் பண்டங்களாக இருந்தாலும் அதன் தரம் என்பது சந்தேகத்துக்குரியதாகவே இருக்கிறது. ஆரோக்கியமான உணவுகள் என்பதைக் கடந்து, ருசிக்கு மட்டுமே முக்கியத்துவம் என்ற அடிப்படையிலான உணவுகளே விற்பனை சந்தையில் அதிகரித்துக் கிடக்கிறது.

எனவே தான் பள்ளி மாணவர்கள் மத்தியில் `நல் உணவு' குறித்த தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதுகுறித்த தெளிவான விழிப்பு உணர்வை உண்டாக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தோம். இதுவரையில் நம் பாரம்பர்ய உணவுகளான கம்பு, சோளம், கேழ்வரகு உள்ளிட்டவற்றை ருசித்திராத எங்கள் மாணவர்கள் எல்லாம் இப்போது ஆச்சர்யத்துடன் நம் உணவுகளையும் விரும்பிச் சாப்பிட்டு மகிழ்கிறார்கள். இதுபோல நிகழ்வுக்காக மட்டும் அல்லாமல், ஒவ்வொருவரின் வீடுகளிலும் நம் பாரம்பர்ய உணவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கம். பெற்றோர்களும் அதற்கு மகிழ்ச்சியுடன் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள் என மகிழ்ச்சியோடு தெரிவித்தனர் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த பள்ளி நிர்வாகத்தினர்.

மாணவர்கள் நடத்திய இந்த உணவுத் திருவிழா பெற்றோர்களுக்கும் ஒரு பெரும் எடுத்துக்காட்டாக அமைந்துவிட்டதாக பூரிப்புடன் சொல்கிறார்கள் நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்களின் பெற்றோர்கள். அரசுப் பள்ளியில் நடைபெற்ற இப்படியொரு நிகழ்வைப் பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.