வெளியிடப்பட்ட நேரம்: 23:45 (29/11/2018)

கடைசி தொடர்பு:06:48 (30/11/2018)

`மகா தீபம் குறித்து வதந்தி!’ - கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல்துறை எச்சரிக்கை

அண்ணாமலையார் கோயில் மகா தீபம் அணைந்து விட்டதாக வதந்தி பரவியதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் வீடுகளில் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர். இதுபோன்ற தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவண்ணாமலை எஸ்.பி எச்சரித்துள்ளார்.

மகா தீபம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்றது. தினமும் காலை, இரவு வேளைகளில் சுவாமி வீதி உலாக்களுடன் தீபத்திருவிழா களைக் கட்டியது. விழாவின் 10-ம் நாளான கடந்த 23-ம் தேதி அதிகாலை பரணி தீபமும், அன்று மாலை 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபமும்  ஏற்றப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தீப தரிசனம் செய்தனர். மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம், தொடர்ந்து 11 நாள்கள் எரியும். தீபத்தின் ஒளி சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவுக்குத் தெரியும்.

இந்த நிலையில், மகா தீபம் அணைந்துவிட்டதாகக் கடந்த இரு தினங்களாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. இதையடுத்து, வேலூர் மாவட்டம் உட்படத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்கள் தங்களது வீட்டு வாசலில் விளக்கேற்றி வழிபட்டு வருகின்றனர். இதுபற்றி திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி. சிபி சக்கரவர்த்தியிடம் (வேலூர் பொறுப்பு) கேட்டதற்கு, ``மகா தீபம் அணையவில்லை. தொடர்ந்து எரிந்துகொண்டிருக்கிறது. நாங்கள் தொடர்ந்து கவனித்து வருகிறோம். இதுபோன்ற தவறான தகவல்களைச் சமூக வலைதளங்களில் பரப்புவோர் யாராக இருந்தாலும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.