வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (30/11/2018)

கடைசி தொடர்பு:07:02 (30/11/2018)

மணல் குவாரியை மூட வலியுறுத்தி குளித்தலையில் கடையடைப்பு போராட்டம்!

சட்டவிதிகளை மீறி மணத்தட்டையில் மணல் குவாரி இயங்கி வருவதாகவும் அதை மூட வலியுறுத்தியும் குளித்தலையில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

 கடையடைப்பு போராட்டம்

 

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மணத்தட்டையில் காவிரியில் அரசு மணல் குவாரி ஒன்று இயங்கி வருகிறது. ஆனால், இந்த மணல் குவாரி சட்டவிதிகளுக்குப் புறம்பாகவும், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவுக்கு எதிராக இயங்கி வருவதாகவும் இயற்கை செயற்பாட்டாளர் முகிலன் தொடர் குற்றச்சாட்டை சுமத்தி வருகிறார். இந்த மணல் குவாரிக்கு 430 மீட்டர் தூரத்திலேயே காவிரி ஆற்றில் மணப்பாறை கூட்டுக்குடிநீர் திட்டம் இயங்கி வருவதாக சொல்லி மணத்தட்டை மணல் குவாரியை இயக்க நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. ஆனால், அந்த நீதிமன்ற உத்தரவை மீறி அதிகாரிகள் இந்த மணல் குவாரியை இயக்கி வருவதாக முகிலன் குற்றம்சாட்டினார்.

கடையடைப்பு போஸ்டர்

அதோடு, ராஜேந்திரத்தில் இயங்கி வரும் மணல் கிடங்கும் முறையான அனுமதி இல்லாமல் நடத்தப்படுவதாக அவர் குற்றம்சாட்டி வந்தார். மணல் குவாரியை மூட வலியுறுத்தி அவர் கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகனை சந்தித்து மனு கொடுக்க பலமுறை முயன்று வந்தார். ஆனால், மாவட்ட ஆட்சியர் தன்னை சந்திக்க மறுப்பதாகவும் குற்றம்சாட்டினார். இந்த நிலையில், மணல் குவாரியை மூட வலியுறுத்தி போராட்டங்களை நடத்த தோழர் நல்லக்கண்ணு தலைமையில் ஆலோசனைக் கூட்டத்தையும் நடத்தினார். அந்த வகையில் முதல் போராட்டமாக குளித்தலையில் அனைத்துக் கட்சிகள், வணிகர் சங்கங்கள், கம்னியூஸ்ட் இயக்கங்களின் ஆதரவோடு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. காலையில் இருந்து மழை பெய்ய, விடாமல் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
 முகிலன்இதுசம்பந்தமாக, நம்மிடம் பேசிய முகிலன்,
``அரசு முன்னின்று சட்டவிதிகளை மீறி நடத்தும் இந்த மணல் குவாரிக்கு எதிராக முதல் கட்டமாக குளித்தலையில் வணிகர்கள், பொதுமக்கள் ஆகியோரின் முழுமையான பேராதரவோடு 100 சதவிகிதம் கடை அடைப்பு வெற்றிகரமாக நடைபெற்றிருக்கிறது. சட்டம் இயற்றும் அரசே அதை மீறுவதும், சட்டத்துக்குப் புறம்பாக செயல்படுவதும், சட்டம் காக்க மக்கள் போராடுவதும் நம் நாட்டில் மட்டும்தான் நடைபெறும் மாபெரும் அவலமாக உள்ளது. மணல் குவாரிக்கு எதிரான எங்களின் இந்தப் போராட்டம் கரூர் மாவட்ட அதிகாரிகளையும், ஆளும் கட்சியினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மக்களின் உணர்வை மதித்து, சட்டவிரோதமாக இயக்கப்படும் மணத்தட்டை மணல் குவாரியை, அனுமதி இன்றி இயங்கும் குளித்தலை-ராஜேந்திரம் அரசு மணல் கிடங்கை உடனே மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. எங்களின் அந்த கோரிக்கைகளை அரசு உடனே செயல்படுத்தணும். இல்லைன்னா, எங்களின் தொடர் போராட்டங்கள் குளித்தலையை ஸ்தம்பிக்க வைக்கும்" என்றார் ஆக்ரோஷமாக!